Categories

Sunday 7 April 2013

என் எழுதுகோல்

நாம் வாழும் வாழ்க்கையில் இயற்கை நமக்கு தந்த உடலோடு சேர்த்து சில செயற்கை கருவிகளும் நம் உடலோடு பிணைந்துவிடுகின்றன. அப்படி ஒரு கருவி தான் நம் எழுதுகோல்.  





எழுதுகோல் என்பது ஆறாம் விரல் போல் தான். (சிலர் சிகரெட் என்று சொல்லுவார்கள். கண்டுக்காதீங்க :) ) மூளையின் பள்ளங்களில் மடிந்து ஒளிந்துகொண்டு இருக்கும் எழுதுகோல் பற்றிய நினைவுச்சுருளை எடுக்கவே இந்தப் பதிவு. அட ஆமாங்க... உங்களை நான் குழந்தைப் பருவத்துக்கே கூட்டி போகப் போகிறேன். நினைத்து பார்த்தால் இந்த எழுதுகோலில் எத்தனை வேறுபாடுகள்!! என் சமகாலத்தில் எழுதுகோல் என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது பேனாவாகத் தான் இருக்கும்.  சற்று பின் நோக்கி போனால், தூரிகை,மை கொண்டு எழுதியுள்ளார்கள். அதற்கும் முன்னால் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளனர். அதற்கு முன்னர் கல் கொண்டு எழுதியுள்ளனர். யோசித்து பார்த்தால் கல் தான் என் முதல் எழுதுகோலாய் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது. ஆம். எங்கள் வீட்டில் ஒரு பெரிய நெல்லிக்கனி அளவில் ஒரு மாக்கல் உண்டு. அதாவது மாவுக் கல். அது ஓரளவு சொரசொரப்பான தளத்தில் எழுத உதவும். அந்த கல் தான் எங்க வீட்டில் தரையில் கோடு போட்டு விளையாட பயன்படுத்துவோம். இப்பொழுது காலப் போக்குல பளிங்குக் கல்லில் அதுக்கு வேலையில்லை. இருந்தாலும், எங்க வீட்டில் இன்னும் இருக்கும். சில வருடத்துக்கு முன்னே கூட பார்த்த ஞாபகம். அதனால, தரையில கிறுக்க அதை தான் எங்க வீட்ல எனக்கு கொடுத்து இருப்பார்கள்.

அடுத்த எழுதுகோல் குச்சி தான். எனக்கு 3 வகை ஞாபகம் வருது. நல்லா குண்டா கிட்டதட்ட சதுரமா இருக்குற குச்சி,ஒல்லியா சதுரமா சுலபமா உடையக் கூடிய குச்சி, உருளை வடிவுல நிறங்களின் கலவையான குச்சி. அந்த கடைசி கலர் குச்சி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அய்யே... எழுத இல்லைங்க.. சாப்பிட ;) அதுக்காக என்னை கேவலமா பார்க்கக் கூடாது.

"குச்சி குடுத்தா எழுதுறவன் பெரிய மனுஷன், சாப்பிட்டா தான் அது குழந்தை" என்று விமலஹாசனே சொல்லி இருக்கார்.  அதோட, அந்த பழக்கம் கால்சியம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தான் அனிச்சையா வரும் என்று ஆய்வறிக்கை சொல்லுகிறது.

ஆசைக்கு அளவு கிடையாது. ஒன்றை அடைந்ததும் இன்னொன்றுக்கு மனசு ஆசைப்படும் என்பது குழந்தையிடமே தெரிந்து கொள்ளலாம். பக்கத்தில் இருக்குற குழந்தையின் வண்ணக் குச்சியை புடுங்கிய குழந்தை... நேரா நிமிர்ந்து வாத்தி கையில் இருக்கும் சாக்பீசை தான் பார்க்கும். :-) ஆனாலும், பொதுவாகவே சாக்பீச்(சுண்ணங்கட்டி) ஆசிரியருக்கான எழுதுகோல். பெரும்பாலும் அதை மாணவர்கள் பயன்படுத்தமாட்டார்கள். எனது குச்சி நினைவுகளை இன்னமும் சிறிது புத்துணர்வுடன் இருப்பதற்கு என் தம்பி, தங்கைகள் தான் காரணம். அவர்களுக்கு நன்றி :)

 அடுத்து நமக்கு வருவது பென்சில் கனவுகள். பென்சில் என்பதற்கு கரிக்கோல் (எ) விரிசில் என்ற சொற்கள் தமிழில் இருந்தாலும், அது நடைமுறையில் இல்லாததால் வாசிப்பு வசதிக்காக பென்சில் என்றே தொடருவோம். முதன்முதலாக, நாம் ஒரு முழு பென்சிலை கையில் பெருமையாய் எடுத்துட்டு போய் தொலைத்துவிட்டு வரும்போது அருமையா திட்டு விழுகும் பாருங்க... அப்புறமும் கெஞ்சி கெஞ்சி திரும்ப முழு பென்சில் தான் வாங்கிட்டு போவோம். ஆனா, அதையும் தொலைச்சிட்டு வரும்போது தான் நம் பெற்றோர் அந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவாங்க. இனிமே அரை பென்சில் தான் என்று ஒரு நல்ல பென்சிலை எடுத்து இரண்டா நறுக்கி ஒரு பாதியை மட்டும் தருவாங்க. அதுக்கு பிறகு, முழு பென்சில் எல்லாம் கனவில் மட்டும் தான் வரும். பின்னாடி அழிப்பான்(ரப்பர்) வச்ச பென்சில் மேல ஒரு மோகம் இருக்க தான் செய்யும். எத்தனை பேர் கையிலேயே பிடிக்க முடியாத அளவுக்கு பென்சில் வைத்து எழுதி வாத்திகிட்ட "என்னடா இது? ஆட்டு புழுக்கை அளவுள்ள பென்சில்?" என்று திட்டு வாங்கி இருக்கீங்க.. கையை தூக்குங்க பார்ப்போம். ஆமா, அப்படி திட்டு வாங்காதவங்க ரொம்ப குறைவா தான் இருப்பார்கள். அது மட்டுமா... எழுதும்பொழுது ஊக்கு உடைந்து விட, நம்மிடம் ஷார்ப்னர்(விரிசில் துருகி) இல்லாமல் பக்கத்தில் கேட்டு மாட்டிக்கொள்ளுபவர் எத்தனை பேர்!! அந்த ஷார்ப்னர்(விரிசில் துருகி) பென்சிலை செதுக்கும் அழகை ரசித்து, ஆசிரியர் சொல்லுவதை கவனிக்காமல் அடி வாங்கியவர் எத்தனை பேர்!!! அது மட்டுமா? நாம் எல்லாம் விஞ்ஞானி இல்லையா? ஷார்ப்னர் சீவிய பென்சில் மரத்துகள்களை அரிசி கஞ்சியில் போட்டால் 2 நாளில் ரப்பர்(அழிப்பான்) ஆகும் என மூத்த மாணவர்களின் ஆராய்ச்சி முடிவை தானும் சோதித்து பார்க்க முடிவு செய்து தனக்கு (ரோ)சோதனையை கூட்டியவரும் உண்டு. தன் தந்தை பிளேடால்(அலகு) பென்சில் சீவும் அழகை ரசித்து, தானும் அதே போல் மெத்தனமாக சீவி தன் விரலை நறுக்கி அதை மறைக்க முடியாமல் அழுதுகொண்டே அம்மாவிடம் அடியையும், பரிதாபத்தையும், பாசத்தையும் சம்பாதித்தவர்கள் அதிகம். நான் தேர்வில் முதலிடம் வந்ததால் என் அம்மா எனக்கு வாங்கி தந்த பென்சில் தான் எனக்கு பிடித்த பென்சில். அது பிளாஸ்டிக்கால்(நெகிழி) ஆன பென்சில், அதனுள்ளே 12 சின்ன பிளாஸ்டிக்கில் சொருகிய ஊக்கு இருக்கும். ஒன்று மழுங்கியதும் அதை எடுத்து பின்னே சொருகினால் இன்னொன்று முன்னே முளைக்கும். அப்படியே மாற்றி மாற்றி விளையாடலாம். எனக்கு பேச்சுப் போட்டியில் கிடைத்த ரப்பர் வைத்த பென்சிலை தான் நான் அதிக வருடம் அலமாரியில் பாதுக்காத்து வைத்து இருந்தேன். அது போக படம் வரைய பல வண்ண பென்சில்கள் நம்மை ஆக்கிரமிக்கும். இன்றளவும், படம் வரைய நவீன நுண்நுனி(மைக்ரோ டிப்) பென்சில்கள் நம் வாழ்வில் உண்டு.

அடுத்து, நம் வாழ்வில் அடிமை சாசனம் நிகழ்த்துவது பேனா.என் தாய்மாமன் எனக்கு பரிசாக கொடுத்தது தான் என் முதல் பேனா. அதை நான் சில வருடம்  பயன்படுத்தவில்லை. என் தாத்தா காலத்தில் அவர் பயன்படுத்திய பேனா தான் நான் எழுதப் பயன்படுத்திய முதல் பேனா. அது மரக்குச்சியில் பாசி வேலைபாடுடன் கூடிய நிப் மட்டும் பொருந்தக்கூடிய பேனா. ஆனால், அதில் மைக்கூடு கிடையாது. மையை தொட்டுத் தொட்டு தான் எழுத வேண்டும்.  அப்படி அதிகமாக தொட்டுத் தொட்டு எழுதி, காகிதம் மற்றும் மையை வீண் செய்து விளையாடியது இன்னும் பசு'மை'யுடன் ஞாபகம் இருக்கிறது. பேனாவில் பந்து முனைப் பேனா(பால் பாயிண்ட்), மைப் பேனா என்ற இரண்டு வகை தான் முக்கியமானது. இதில் மைப் பேனா பயன்படுத்தவே பள்ளிகளில் வலியுறுத்தப்படும். ஆனாலும்,  பந்து முனைப் பேனாவும் நம் டப்பாவில் இடம்பிடிக்கும். அடிக்கடி, தன்னிடம் உள்ள டப்பாவை பல்லால் திறந்து பேனாக் கணக்கை சரி பார்க்காத சிறுவர்/சிறுமி உண்டா? மைப் பேனாவில் சொரசொரப்பாக எழுதுகிற பேனா, வைத்தவுடன் வழுக்கி எழுதுகிற பேனா, ஒல்லியாக எழுதுகிற பேனா, பட்டையாக எழுதுகிற பேனா என எத்தனை வகை பேனாவை தந்தையிடம் கேட்டு இருக்கிறோம். "ஆடத் தெரியாதவளுக்கு தெருக் கோணல்" என்பதைப் போல் நம் கையெழுத்து சரியாய் இல்லாததற்கு எத்தனை பேர் பேனாவையும், அதை வாங்கி தந்த அப்பாவையும் குறை சொல்லி இருக்கிறோம். பேனாவை நம் வழிக்கு கொண்டு வர எத்தனை முயற்சிகள். பேனாவை அக்கக்காக கழட்டி கழுவி காய வைத்து திரும்ப ஒருங்கிணைத்து, நிப்பின் நுனியில் பிளேடினால் பிளவு ஏற்படுத்தி நம் வழிக்குள் கொண்டு வருவதற்குள்.. ஸப்ப்பா....

கசிகின்ற பேனாவை சட்டை, புத்தகம் எனப் பல இடங்களில் வைத்துவிட்டு அதனால் அவதிக்குள்ளாவோர் பலர். அதை சரி செய்ய மைக் கென உள்ள பிரத்தியேக அழிப்பானை பயன்படுத்தினால் அவ்வளவு துயரம் இல்லை. அதை விடுத்து பிளேடால் அழிக்க நேர்த்தியான சிற்பிப் போல செயல்பட்டு காகித்தை கிழித்துவிடுவோம் அல்லவா நாம் :)
அதற்கு மை ஊத்தவும் அதற்குறிய மை நிரப்பானை(இங்க் ஃபில்லர்) பயன்படுத்தாமல், நம் அப்பாவைப் போல் மைக் குடுவையில் இருந்து நேராக பேனாவிற்குள் மையை ஊற்ற முயற்சித்து மையை சிந்தி அடிவாங்கியவர்கள் அதிகம். பள்ளி மேசையை சாட்சியாகக் கொண்டு, நண்பர்களிடம் ஒருத் துளி மையை கடனாகப் பெற்று  நட்பை வளர்த்தவர் நம்மில் பலர்... :)

விலை அதிகம் விற்ற ஹீரோப் பேனா தான் பல வருடம் நம் கனவு நாயகன். அதை அடைந்தபின், நம் ஆர்வத்தை கவர்வது பார்க்கர் பேனா. பதின்ம வயதில் நம் எதிர் பாலினத்தை கவரவும் இப்பேனா பயன்படுகிறது. தன் கையில் லாவகமாக பேனாவை சுழற்றி தன்னை சுற்றி இருப்பவர்களை தன் வலையில் வீழ்த்துபவர் ஒரு ரகம், அதை தானும் முயற்சி செய்து தோற்று பொறாமையில் திரிபவர்கள் இன்னொரு ரகம். நான் இரண்டாம் ரகம். :) கல்லூரி வந்தபின், பெரும்பாலும் பந்து முனைப் பேனாவும், களிமப் பேனா(ஜெல் பேனா) தான் வசதிக்காக பயன்படுத்தினேன். அடிக்கோடிட பல வண்ணப் பேனாவும், ஜிகு ஜிகு என மின்னும் மை கொண்ட பேனாவும்  புதிய வரவாக இருந்தது.

இப்படி என் வாழ்வில் 21 வருடம் என் சட்டைப் பையிலும், அதற்குபின் உள்ள என் இதயத்திலும் இடம் பிடித்து இருந்த என் எழுதுகோல், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை சேர்ந்த பின் தன் வேலையை(பதவியை) இழந்துவிட்டது. எதையாவது குறிப்பெடுக்க அவசியம் ஏற்பட்டாலும்  கணினி அல்லது அலைப் பேசியில் குறித்துக் கொள்ளும் நிலை வந்தவிட்டது. எங்காவது கையெழுத்துப் போட வேண்டிய நிலை வந்தாலும், இரவல் பேனா தான் உதவியது. இப்படி எனக்கும், என் எழுதுகோலுக்கும் உள்ள உறவு அறுந்த இருந்த நிலையில் ஒரு நாள் எனக்கு விமானநிலையத்தில் பேனா தேவைப்பட என் தந்தை அவசரமாக என்னிடம் அவர் பேனாவை ஒப்படைத்தார். கடந்த 2 வருடங்களாக அந்த பேனா என் பைக்குள் புகலிடம் தேடிக் கொண்டு எனக்கு விமான நிலையத்தில் மட்டும் உதவிக் கொண்டு இருந்தது.

இப்பொழுது நான் புதிதாய் சேர்ந்து இருக்கும் வேலையில், அடிக்கடி கையொப்பம் இட அதிக அவசியம் இருப்பதால் உறவைப் புதுப்பித்துக் கொண்டு என் சட்டைப் பையில் ஏறி அமர்ந்து கொண்ட என் அப்பா கொடுத்த பேனா என்னை இந்தப் பதிவையும் எழுத வைத்துவிட்டது....          

நன்றி,
ச.சக்திவேல்

Image Source: http://hd.wallpaper-s.biz/walls/feather_pen_and_ink_of_old_days_writing_materials-wide.jpg

Thanks :)

15 comments:

  1. எழுத்தின் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு மாற்று சிந்தனை பதிவாகவே நான் இதை படித்தேன்
    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தம்பி... நீ ஏன்பா அப்படி எல்லாம் யோசிக்குற.. நான் சும்மா எல்லாருக்கும் ஒரு பழைய நினைவை தூண்ட தான் எழுதினேன்.. கூல்... கூல்... நன்றி எழுதுவேன்... :)

      Delete
    2. நண்பா,
      இந்த மாவுக்கல்லை வைத்துதான் கணினி புரட்சியே நடக்கிறது. இக்கல்லை சாதாரணமாக கூறிவிட்டீர்கள்.இது ஒரு குறைகடத்தி, மக்கு ஆக இருப்பதும் மாமேதையாக இருக்கவும் இதுவே காரணம். இது ஒரு ஆதி இரகசியம்.

      Delete
  2. ஸ்கூல் லைஃப்ல இந்த 'பென்சில் உடைப்பு' ஒரு சுவாரசியமான மேட்டர்!

    அதிகமா பென்சில் தொலைக்கிறேன்னு,ஸ்கூல் வாசலிலியே எங்கப்பா ஒரு முழு பென்சில் வாங்கி பாதி உடைச்சு என்கிட்ட கொடுத்துட்டு மீதியை அவர் வீட்டுக்குக் கொண்டு போயிருவார்.காமெடி என்னன்னா, என் பாதிய விட
    அவர் கொண்டு போற மீதியை எனக்கு முன்னாலயே தொலைச்சுருவாரு. அதுவும் வீட்லயே! அப்பறம் திரும்பவும் ஒரு பென்சில் உடைப்புன்னு தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... நன்றி :)

      Delete
  3. Nalla narration sakthi.. IT la vandhadhuku apram pena usage eh u llama poachu :-( pencil seevunadhula irundhu rubber uruvakradhu than yaru kandu pidicha ne theriyala :-) unaku mai thotu eludhura pena la irundhu ipavaraikum pena use panraduku kuduthu vechiruka!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டா... இவ்வளவு வேகமா படிச்சு பின்னூட்டம் போட்டுட்ட.. உங்க ஊர்லையும் 'அந்த' ரப்பர் தயாரிப்பு முறை இருந்துச்சா? :-)

      Delete
  4. எழுதுகோல் பிடிக்காதவன் கல்வி பாழ் .எழுதுகோல் பிடித்தவன் எண்ணங்களை வடிப்பான்.படிக்க சுவாரசியமாக இருந்தது .
    மிகவும் சிறுவயதில் சண்டையில் பேனாவை ஒளித்து வைப்பது ,நிப்பை மொன்னை ஆக்குவது ,சட்டையில் இங் அடிப்பது என பலவகை
    தாக்குதல்கள் உண்டு .
    சட்டையின் ஓரங்கள் ,டவுசர் பைகள்,தாவணி ஓரம் ,அல்லது
    பாவாடை கீழ் பகுதி இங் கறை இல்லாத மாணவமணிகள் கிடையாது .
    எழுத தெரியாதவனுக்கு எதுக்கு ஆயிரத்தெட்டு
    பேனா என்று என் அப்பா திட்டுவார் . அப்பாவின் கையெழுத்து அழகாக
    இருக்கும்.ஒரு முறை என் பாட்டி சிறுவயதில் பேனாவுக்கு அழுத போது
    ஈர்க்குச்சி முனையை சீராக்கி ,மை தொட்டு எழுதி காண்பித்து ,
    வைத்து கொள் என்றாள். அவள் கையில் அழகாக எழுதும் அந்த
    ஈர்க்குச்சி எனக்கு சரி வரவில்லை . அழுகைதான் வந்தது .
    பென்சிலையோ , பேனாவையோ பக்குவமாக கையாளுபவர்கள்
    புத்திசாலியாக இருப்பார்கள் என்பது என் அப்பிப்ராயம் .அவர்களிடம் ஒரு
    ஒழுங்கு இருக்கும் .ஆனால் தொட்டால் சுருங்கியாக இருப்பார்கள் .
    பொதுவாக பெண்கள் அல்லது மாணவிகள் பேனா ,பென்சிலை அழகாக
    கையாளுவார்கள் .என்னுடைய அழுக்கு பேனா கூட அவர்கள் கையில்
    இருக்கும்போது அம்சமாக இருக்கும்.பள்ளிகூட நாட்களில்
    மாணவனை மாணவி தேடுவது ,பேனாவின் கழுத்தை திறப்பதற்காக இருக்கும்.
    அப்படி திறந்து தருவது ஒரு ஹீரோயிசம் என கருதப்பட்டது .
    மீசை அரும்புவதும் , பேனா புழக்கத்தில் வருவதும் கிட்டதட்ட ஒரே
    பருவத்தில் தான் .
    பேனாவை எடுத்தால் கவிதை ஊற்றாய் வரும் என்ற என் எண்ணம்
    பொய்த்து போனது , எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம் .
    எல்லோர் வீட்டிலும் ஒரு பெட்டியில் , பழைய ,உடைந்த பேனாக்களின்
    பாகங்கள் வைக்கபட்டிருக்கும் . புது பேனா வாங்கித்தராமல்
    அந்த பழைய பேனா பாகங்களை வைத்து அப்பா பேனாவை
    சரி செய்து நமக்கு தரும்போது அவர் முகத்தில் பெருமை ,என்
    முகத்தில் ஏமாற்றம்.
    இன்னும் ஏராளமான பேனா நினைவுகள்
    போன காலங்களை நினைக்க வைத்த உங்களுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி :) இதை பாக்கும்பொழுது நான் நிறைய எழுதாம விட்டுட்டேனோன்னு தோனுது... ஆனா அதை நீங்க பின்னூட்டமா போட்டது படிக்கிற எல்லாருக்கும் வசதியா இருக்கும் :)

      Delete
  5. இங்க் பேன◌ானு சொன்ன உடனே எனக்கு டக்குனு வர ஞாபகம் நாங்க பரீட்சை முடிஞ்சிட்டா ஒருத்தொருக்கொருவர் இங்க் அடித்து விளையாடுவோம். ஒயிட் சர்ட் புளு கலர்ல மாறிடும். வீட்ல பயங்கர திட்டு விழும். அது ஒரு கனா காலம். அப்பலாம் குட்டியா ரெண்டு ரூபாய்க்கு ஒரு பேனா விக்கும் சுண்டு விரல் சைஸ் தான் இருக்கும். அத வச்சிகிட்டு நாங்க காட்டுற பந்தா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படி விளையாடி இருக்கேன்... நானும் அந்த குட்டி பேனா வாங்கி இருக்கேன்.. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி :-)

      Delete
  6. நல்ல பகிர்வு! புத்தம் புதிய பென்சில் ஒன்றின் வாசம் நினைவில் மீண்டும்!!

    ReplyDelete
    Replies
    1. வாசம் பகிர்ந்ததுக்கு நன்றி :)

      Delete
  7. பெரிய இலக்கியவாதியை பாலோ பண்ணுகிறோம் என்று ரொம்பப் பெருமையாக உள்ளது. அதுவும் பின்னூட்டம் இடுபவர்களும் கலக்குகிறார்கள்! பலபம் எழுதுவதற்கும் பசிக்கும் போது கடித்துக் கொள்வதற்கும் ஏற்றது. பேனா பற்றி எழுத எவ்வளவோ உள்ளது. சில பேனாக்கள் இராசியானவை. அவை கொண்டு எழுதும் தேர்வில் அதிகப் மதிப்பெண்கள் பெறுவது சர்வ நிச்சயம் ;-)எவ்வளவு தேய்த்துக் குளித்தாலும் லீக் ஆகும் இன்க் பேனாவினால் இரண்டாம் விரல் முனை என்றும் வெளிர் நீல நிறம் :-)

    சூப்பர் பதிவு!

    amas32

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உங்க பின்னூட்டம் வரலையேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. :-) ஆமா எல்லாரும் சொல்லச் சொல்ல நிறைய விட்டுட்டேனோன்னு தோனுது.. ஆனா, அவங்க அவங்க கற்பனையை /நினைவுகளை தூண்டி இருக்குன்னு தெரியுறதால.. சந்தோஷமா இருக்கு...:-) நன்றி :-)

      Delete