Categories

Wednesday, 28 August 2013

மூளையின் மூளை - சிறுகதை

(இது நடக்கும் ஆண்டு கி.பி 2035 என மனதில் கொள்க)

ஒரே சமயத்தில் தோட்டத்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயிரம் பட்டாம்பூச்சியின் சிறக்கடிப்பை தன் இதயத்தில் உணர்ந்தபடி, தன் அறையில் பரபரப்பு மிகுந்த மூளையுடன், படபடக்கும் பார்வை மூக்குக் கண்ணாடி வழி ஊடுருவ இயங்கிக் கொண்டிருந்த அரவிந்தன், தன் மனைவி ராகினியின் பத்தாவது அழைப்பு ஒலி கேட்ட பின் அதற்கு செவி மடுக்க முடிவு செய்தார். அவருடைய வேலையும் ஓரளவு முடிந்து விட்டதால் ஒரு வழியாக அறையை விட்டு வெளியேறினார்.





இரவு உணவுக்காக அழைத்தும் தாமதமாக வந்ததால், உணவை கொடுக்கும் முன், கேள்விகள் கொடுக்கப்படும் எனத் தெரிந்தே தான் அமர்ந்தார். அதில் ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.
"எத்தன தடவ கூப்பிடுறது? ஒரு மணி நேரம் ஆச்சு. இதுல பயங்கரமான சத்தம் வேற போட்டுட்டு இருக்கீங்க" என்று அலுத்துக்கொண்டாள் ராகினி.

அதைச் சொல்லத் துடித்துக் கொண்டு இருந்த அரவிந்தன், ராகினிக்கு தன்னுடைய ஆராய்ச்சிகளில் ஆர்வம் இல்லை எனத் தெரியும் என்பதால் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை அடக்கிக் கொண்டு பெருமிதத்துடன் "இதை உன்கிட்ட தான் முதல்ல சொல்ல ஆசைப்படுறேன். என் மூளை சம்பந்தமான ஆராய்ச்சி சக்சஸ் ஆயிடிச்சு. அது தான் சந்தோஷமா என் ரூம்ல கத்தினேன். நம்ம மூளையோட சப்கான்சியஸ்.... "
"சப்பாத்தி வைக்கவா?" என்று ராகினி குறுக்கிட்டாள் எந்த வித சந்தோஷமும் இல்லாமல், அதே சமயம் 'என்ன தான் ஆராய்ச்சியோ,குடும்பத்தை கூட கவனிக்காம?' என மனதிற்குள் புலம்பினாள்.

அரவிந்தன் வாடிய முகத்துடன் சலிப்பு தட்ட "வை. ரெடிமேட் சப்பாத்தி தான, அந்த காலத்துல எங்க அம்மா போடுற சப்பாத்தி மாதிரியா இருக்க போகுது.இந்த கோல்மார்க் மாதிரி ஹைபர் மார்கெட் வந்ததில் இருந்து எல்லாமே ரெடிமேட் தான்... எல்லாத்தையும் கூட பொறுத்துக்க முடியுது... ஆனா மதுரை முட்டை பரோட்டாவை ரெடிமேடா பாக்க மனசு சகிக்கல.." என்றார்.

இது எதையும் அலட்டிக் கொள்ளாத ராகினி தனது ஐபோன் ப்ரோ 25 க்குள் தலையை சாய்த்தவாறே உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்கு போய்விட்டாள்.

அது சனிக்கிழமை இரவு என்பதால் திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டிய நிலையில் அரவிந்தன் இருந்தார். தன்னுடைய சாதனையை பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாததால், போட்டி உலகில் நண்பரிடம் கூட பகிராமல் காத்து இருந்தார்.

சரி. திங்கள் கிழமைக்குள் அவரை பற்றி கொஞ்சம் நாம் தெரிந்து கொள்வோமா? ஐம்பது வயதை அடையப் போகும் அரவிந்தன் இந்த நவீன யுகத்தில் வாழும் சற்றே பழமைவாதி. அடர்ந்த முடியும்,புருவமும்,தடித்த கட்டை மீசையும்,மெல்லிய உதடும் கூடிய வாழைமரப் பட்டைக்குள் அடங்கிவிடுவது போல் உருவ அமைப்பு உள்ளவர். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO) மூத்த உதவி ஆராய்ச்சியாளர் பணி. இன்னமும் வயதிற்குரிய உருவ முதிர்ச்சி தெரியாத ராகினி தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கிறார். இந்த காலகட்டத்தில் கூட வேலை வேலை என பொழுதை கழிக்கும் மனநிலை உள்ளவர் அரவிந்தன்.

திங்கட்கிழமை காலை உற்சாகத்துடன் நல்ல வெள்ளை உடையும்,பளபளக்கும் கருப்பு தோல் சப்பாத்துகளையும் மாட்டிக்கொண்டு தனக்கு அரசு வழங்கிய பிரத்யேக காரில், தன் ஆராய்ச்சி முடிவுகளுடன் கிளம்பினார் அரவிந்தன். மணிக்கு 200 கிமீ வேகத்தில் காரை செலுத்தினார். 2 மணி நேரப் பிரயாணம். பக்கவாட்டு கண்ணாடிகளை இறக்கிவிட்டு பனி உருகும் வாசம் கலந்த அதிகாலை பூங்காற்றை நுகர்ந்தபடியே தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார். வழி எங்கும் இரு பக்கமும் மரங்கள். ஆம். இந்தியா 2020ஆம் ஆண்டு புரட்சிக்கு பின் பெரிய அளவில் மாறி இருந்தது. மனிதனின் அடிப்படை தேவையான நீர்,உணவு, சுத்தமான சூழல், நல்ல மருத்துவம் அனைத்தும் ஒவ்வொரு இந்தியனுக்கும் சேர சரியான திட்டமிடல் மூலம் வழிவகை செய்யப்பட்டுவிட்டது. ஊழலை ஒழிக்க பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அனைத்துக்கும் டெபிட் கார்டின் மூலம் பணப்பரிமாற்றம் என்ற நிலை வந்துவிட்டது.  ஆனால், ஹேக்கர்களை (Hackers) சமாளிக்க ராணுவத்துக்கு இணையாக செலவு செய்ய வேண்டி இருந்தது. எல்லா நகரங்களிலும் குறுக்கும் நெடுக்குமாக அதி விரைவு பறக்கும் ரயில்களும், பாதாள ரயில்களும் போடப்பட்டு மக்கள் பிரயாணம் செய்ய ரயிலை மட்டுமே பயன்படுத்த உத்தரவு இருந்தது.வேகமாக செல்ல வசதியாய் இருந்ததால் மக்களும் அதையே விரும்பினர். அரசால் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே சொந்த வாகனம் அனுமத்திக்கப்பட்டது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுசூழல் பேணவும் இவ்வாறான நடைமுறையை பின்பற்றினர். மேலும், மக்கள் தங்களின் வரி பணத்தில் 5% மரம் நடவும்,ஏழை மாணவர் படிப்புக்கும் உதவி பண்ணி அதற்கு உரிய சான்று அரசுக்கு கொடுக்கவும் சட்டம் போட்டு இருந்தார்கள். இதனால், கல்வி மற்றும் சுற்றுசூழலும் முன்னேற்றம் அடைந்து இருந்தது.

முன்னேற்றம் இருந்தாலும், மக்களிடம் சுறுசுறுப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை பறைசாற்றும் விதமாக அரவிந்தனின் அரசு அலுவலகம் இருந்தது. அலுவலகம் அடைந்தவுடன், நேராக மூத்த ஆராய்ச்சியாளர் மோகனகிருஷ்ணன் அறை நோக்கி நடந்தார் அரவிந்தன். குளிர்பதன அறையில், தனக்கும் இங்கு நடக்கும் எதற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிம்மதியுடன் கண்ணாடி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்த காந்தியின் உருவத்திற்கு கீழ தொப்பையை சரித்து அமர்ந்து இருந்த மோகன கிருஷ்ணன்,கொஞ்சம் ஏகத்தாள குணமுள்ள,பருமனான ஆள். தன் பிற 'திறமை' மூலம் தன்னை விட சிறந்த அரவிந்தனை முந்திக் கொண்டு இந்த பதவியை அடைந்தவர்.

'குட் மார்னிங் மோகன் சார்' என்ற அரவிந்தனுக்கு அசிரத்தையாக தலையை ஆட்டினார் மோகன்.

'நான் மிகச் சிறந்த ஆராய்ச்சி ஒன்னு முடிச்சு இருக்கேன்.அதை விளக்கிச் சொல்ல உங்க அனுமதி வேணும்'. என்ற அரவிந்தனை பார்த்து 'நம்ம கிடப்புல போட்ட ஆராய்ச்சில ஏதாவது முன்னேற்றம்ன்னா சொல்லுங்க. இல்லைனா போங்க. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.' என்ற பதிலளித்தார் மோகன்.

அரவிந்தன் 'இல்லை மோகன்.இதைக் கேட்டா நீங்களே பாராட்டுவீங்க. இந்த நூற்றாண்டோட சிறந்த கண்டுபிடிப்புல இதுவும் ஒன்னா இருக்கும். பிளீஸ்...' என்று கொஞ்சம் நயந்து கேட்டார்.

மோகன் சலிப்புடன் 'வர வர யாரு எதைக் கண்டுபிடிச்சாலும் இதையே சொல்லவேண்டியது..ம்‌ம்‌ம்..சரி சொல்லுங்க கேப்போம்' என்றார்.

"நம்ம மூளை ஒரு நிமிஷத்துல பல விஷயங்களை யோசிக்குது.ஆனா எல்லாத்தையும் ஞாபகம் வச்சிக்க முடியறது இல்ல. இது, ரொம்ப காலமா மனிதனுக்கு ஒரு பெரிய குறை. மூளையின் அலைகள் மின்காந்த அலைகளுக்கு ஏற்ப மாறக் கூடியது. அதை பயன்படுத்தி தான் 'டிஎம்எஸ்'ங்கற Transcranial magnetic stimulation முறை மூலம் பல வருசங்களா மூளை சம்பந்தமான சில நோய்களை குணப்படுத்துறாங்க. அதுக்கு தலைகீழா, நம்ம சட்டைப் பைக்குள்ள வைக்குற அளவுல சின்ன ஒரு கருவி மூலம் ஒரு ஃபெர்ரி மேக்னடிச அலைகளை உருவாக்கி,அதை மூளையின் அலைவரிசைக்கு ஏற்ப பொருந்தி செயல்பட செய்துட்டா போதும். பிறகு, நவீன மேக்னெடிக் டேப் Me-RAM முறைப்படி அதையெல்லாம் ஒரு டெரா பைட் மெமரி கார்டில் எழுதி விடலாம். அதன் பிறகு மூளை யோசிக்கும் ஒவ்வொரு விஷயமும் இந்த கருவில பதிவு ஆகிடும். இந்த கருவிக்கு "அரவிந்தனின் மூளையின் மூளை"ன்னு பேர் வச்சு இருக்கேன். ஆங்கிலத்துல சுருக்கமா ABBன்னு சொல்லலாம்" என்று பழைய ஆங்கில டப்பிங்கில் வரும் வயசான ஆராய்ச்சியாளர் போல சொல்லி முடித்தார் அரவிந்தன்.

ஒரு பெருமூச்சு விட்ட மோகன் "வடை சாப்பிடுறீங்களா?" என்றார்.

"இப்ப வடை ரொம்ப முக்கியமா மோகன்?"

"எனக்கு முக்கியம் தான். ரெடிமேட் மாவு இல்லாம, ஒரு 70 வயசு பாட்டி கைப்பட மாவு அரைச்சு போடுறாங்க. இந்த கோல்மார்க் ஹைபர் மார்க்கெட் காலத்துல இதெல்லாம் இன்னும் எவ்வளவு நாள் கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது.சாப்பிடுங்க"

அரவிந்தன் எரிச்சலுடன் "எனக்கு வேணாம். என் ஆராய்ச்சி முடிவை ஹெட் ஆபீசுக்கு அனுப்பிடவா?"

"இருங்க அரவிந்தன். இப்ப ஏன் அவசரப்படுறீங்க? 10வது படிக்குற பையன் கூட சொல்லிடுவான். நம்ம எழுப்புற அந்த காந்த அலையே மூளையை தாக்கும்ன்னு. இதை கூடவா யோசிக்காம இவ்வளவு தூரம் வந்தீங்க? என்ன ஆராய்ச்சியோ...!!!"

"அடச்சே. சாரி மோகன். அதை சொல்ல மறந்துட்டேன். இதுக்காகவே, ஒரு பக்கம் அலைகளை மட்டும் வடிக்கட்டும் மேக்னடிக் ஃபில்டர் உருவாக்கி இருக்கேன். இதோட பயன்களை பாருங்க. இனிமே, கவிஞர்கள்,சிற்பிகள், ஓவியர்கள் நினைப்பது இங்க பதிவு ஆகிடும். நம்ம மாதிரி ஆராய்ச்சியாளர்களும் எதையும் மறந்துட்டு வருத்தப் பட தேவையில்லை.ட்விட்டர்ல இருக்கவங்களோட 25 வருசக் கனவு இது. சாதாரண ஞாபக மறதி அதிகம் உள்ளவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும். மொத்ததுல இது ஒரு மூளையோட பேக்அப் மாதிரி. இதனால, ஞாபக மறதியே இல்லாத உலகம் உருவாக வாய்ப்பு இருக்கு. போலீஸ்லையும்,ராணுவத்துலையும் கூட பொய் சொல்றவங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தலாம்."

"பச்.நான் சைண்டிஸ்ட் அரவிந்தன்.உங்க மார்கெட்டிங் வித்தை எல்லாம் என்கிட்ட காட்டாதீங்க. அழகான கிஃப்ட் பேக் பண்ணி எல்லாம் என்னை ஏமாத்த முடியாது. உங்க சயிண்டிஃபிக் ரிசல்ட்ஸ் முதல்ல கொடுங்க. எந்த டிவிசனோட லேப்ல இதை பண்ணிட்டு இருக்கீங்க?"

"இதை.. இதை வீட்ல வச்சி தான் ஆராய்ச்சி பண்ணேன்" என்று மென்று விழுங்கி சொன்னார்.

"என்னது வீட்டுலையா?!!!" என்று மோகன் அதிர்ச்சியானார்.

இப்பொழுது சற்றே தைரியத்துடன் "ஆமா. வீட்டுல தான். அதை விடுங்க மோகன். இதை சாமானியர்களும் வாங்கி பயன்படுத்தும் விதத்துல தான் உருவாக்கப் போறேன். அதுக்கு அரசு மானியம் தரச் சொல்லியும் கேக்கணும்"

"இங்க பாருங்க அரவிந்தன். நாம என்ன அப்துல் கலாம் காலத்துலையா இருக்கோம். இன்னமும், ஆபீஸ் நேரம் போக வீட்ல கூட ஆராய்ச்சி, ஆராய்ச்சின்னு அதை செய்துட்டு இருக்க?? உங்க கண்டுபிடிப்பு வெளிய வந்தா அதுல கிடைக்குற நன்மைகளை விட கெட்டது தான் அதிகம். இது மூளைக்கு எந்த வித பக்கவிளைவும் ஏற்படுத்துமான்னு தெரில. உங்களோட ABB சின்ன கருவின்னு சொல்லுறீங்க. அதை பிரைவேட் டிடெக்டிவ் ஏஜன்சீஸ் சுலபமா மத்தவங்க மூளைல இருக்குற விஷயத்தை எடுக்க பயன்படுத்த ஆரம்பிச்சுருவாங்க..."

அரவிந்தன் கடுப்புடன் குறுக்கிட்டு "நீங்க அனாவசியமா ஏதேதோ பேசுறீங்க மோகன்" என்றார்.

 "எது அனாவசியம்? உங்க கருவியோட பயன்பாட்டை கொஞ்சம் மாத்தினா அடுத்தவங்க மூளைல என்ன யோசிக்குறாங்கன்னு அவங்க அனுமதி இல்லாமலேயே தெரிஞ்சிக்க முடியும்.  இப்ப காலத்துல ஐபோன்,சாம்சங் காரங்க எல்லாம் எதை ஆப்ஸ் ஆக்கலாம்ன்னு திரியுறாங்க. அவங்களுக்கு உங்க கருவிய அவல் மாதிரி கொடுக்குறீங்க மென்னு திங்க.  ஏற்கனவே, டிவெர்ஸ் கேஸ் அதிகமா இருக்குற இந்த நாட்டுல்ல இதை கணவன்,மனைவி மாறி மாறி வேவு பாக்க பயன்படுத்தினா என்ன ஆகும்?? ஒரு சின்ன பிசினஸ் மேன் முதல் நாட்டின் பிரதமர் வரை யாருக்கும் இது ஆபத்து தான். இது தனிமனித சுதந்திரத்தையே அழிச்சிடும். நீங்க என் கூட பல வருசமா வேலை பாக்குறவர் அடிப்படைல உங்க ரிசல்ட்ஸ் பாத்துட்டு இதை நம்ம ராணுவத்துக்கு மட்டும் பரிந்துரை செய்யுறேன்"

இதற்குள் கோவத்துடன், பழைய நினைவுகளும் கைக் கோர்த்து கொள்ள அரவிந்தன் தன் குரலை உயர்த்தி "ராணுவத்துக்காக மட்டும் இதை நான் செய்யல. எங்க நான் உங்களை விட பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பொறாமைல என்னை தடுக்க பாக்குறீங்க. நான் இதை நேரடியா நம்ம செக்டார் ஹெட் கிட்ட பேசிக்கிறேன். எவ்ளோ நாள் தான் என்னை ஏமாத்துவீங்க..." என்றார்.

பொறுமையிழந்த மோகன் "ஓகோ.ஹெட் கிட்ட போவீங்களோ? எப்படி உங்க ஆராய்ச்சி முடியுதுன்னு நானும் பாக்குறேன். முதல்ல இது மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி, நேஷனல் பிரைன் ரிசர்ச் சென்டர்(National Brain Research Centre) தான் ஆராய்ச்சி பண்ணனும். நம்ம நிறுவனம் பண்ணக் கூடாது.அப்படியே, சம்மதிச்சாலும் உங்க ப்ராஜக்ட்ல இருக்குற ஓட்டைக்கு அது வெளிய போகாது. இதுக்கெல்லாம் மேல நீங்க ஒரு அரசு ஊழியர். தனியா இப்படி ஒரு ஆராய்ச்சி பண்ணதே தப்பு. என் பவர் வச்சி இப்பவே உங்களை டிஸ்மிஸ் பண்ண முடியும். ஆனா..."

இதற்குள், அந்த ஒல்லி உருவம் தலை முதல் கால் வரை கொதிக்கும் விறகு கட்டை போல ஆனது, உடம்பின் மொத்த நரம்பும் புடைக்க "நிறுத்துங்க. நீங்க என்ன டிஸ்மிஸ் பண்ணுறது? நானே ராஜினாமா பண்ணுறேன்" என்று சொல்லுவிட்டு தன் குறுமடிகணினியில் நடுக்கத்துடன் ராஜினாமா மின்னஞ்சல் அனுப்பிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தார் அரவிந்தன்.

தன்னை மிதித்துவிட்டு வளர்ந்த மோகனிடம் அடைந்த தோல்வி என்பதால் அசூசையுடன் கூடிய கோப ஜுவாலை பெருகியபடியே இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற பழைய வெறி, நெய் போல இன்னும் கோவத்தை வளர்த்து கொண்டிருந்தது. அதற்கான திட்டமிடல் மட்டுமே செல்லும் வழியெல்லாம் மலையில் இருந்து உருட்டிவிட்ட குடம் போல மனதில் உருண்டு கொண்டு இருந்தது. இறுதியாய், மக்களிடம் இதை நேரடியாய் சேர்க்க, ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய கார்ப்பரேட்களிடம் இதை விற்றுவிட எண்ணினார்.ஏனென்றால், அவர்கள் தான் விளைவுகளை விட பொருளின் விற்பனைக் கவர்ச்சியை பார்ப்பார்கள். இதன் மூலம், வாழ்வதற்கு தனக்கும் ஒரு வருமானம் கிடைக்கும் என்று முடிவு செய்தார்.
இதை விரைவாய் செய்யவும்,அதே சமயத்தில் ஒரே சந்திப்பில் அனைவரையும் தன் வழி ஈர்க்க ஒரு திட்டம் தீட்டினார். அதாவது, இந்த கருவியை பெரிய அளவில்,அதிக திறனில் உருவாக்கி, ஒரே நேரத்தில் அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்து ஒரு அறையில் அமர வைத்து அவர்கள் மூளை யோசிப்பதையெல்லாம் பதிவு செய்து, தனித்தனியே அவர்களுக்கு அவர்கள் சிந்தனையை மறுபடி போட்டுக் காட்டி அசத்திவிடலாம் என்பதே அது.

அதற்காக, தன் சொத்து எல்லாம் முடக்கி இரண்டு மாதம் விடாமல் அந்த கருவியை உருவாக்க உழைத்தார் அரவிந்தன். பலூன் கடையை கண்டதும்
தன் இடுப்பில் இருக்கும் கச்சை கழன்று விழும் பிரக்ஞை கூட இன்றி பலூன் வாங்கச் செல்லும் குழந்தை போல எந்த பிரக்ஞையுமின்றி வேலை செய்தார்.

எதிர்பார்த்ததை விட ஒரு வாரம் காலம் அதிகம் ஆனது, பொருட்ச் செலவும் மிஞ்சிவிட்டது. ஆயினும், வெற்றிகரமாய் அந்த கருவியை உருவாக்கிவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். இதை தன் மனைவியிடம் சொல்ல நினைத்த அரவிந்தன் திடீர் என ஒரு யோசனை மனதில் தொக்கி நிற்க,அந்த கருவியை சோதிக்க முற்பட்டு, அதை இயக்கி பக்கத்து அறையில் உள்ள மனைவி ராகினியின் எண்ண ஓட்டங்களை பதிவு செய்துவிட்டு, அந்த பதிவை போட்டுக் கேட்டார்.

அது "சொத்தையெல்லாம் அழிச்சிட்டு ஒரு மாசமா ஒரு வார்த்தை கூட பேசாத அன்பில்லாத இப்படி ஒருத்தர் நம்ம வாழ்க்கையில தேவையா? டிவெர்ஸ் பண்ணிடலாமா" என்றது.



பின்குறிப்பு: தோணுற டிவிட் எல்லாம் மறந்து போகுது.அதுவா எங்காவது பதிவு ஆனா நல்லா இருக்குமேன்னு மத்த எல்லாரையும் போல நானும் யோசிச்சப்ப வந்த கரு இது. அதை அப்படியே கதையாய் எழுத்திட்டேன். நோ துப்பிங் பிளீஸ் :-))


Image source: http://www.hektoeninternational.org/images/shutterstock_18912031_Labyrinth_Inside_Head.jpg Thanks :)

27 comments:

  1. நல்ல முயற்சி சக்தி :-) தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் அதிகம் பேர் எழுதுவது இல்லை என்று நான் எப்பொழுதும் நினைப்பதுண்டு ... தொடர்ந்து எழுதவும் - @ஸ்வீட்சுதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுதா மேம் :-) எழுத முயற்சி பண்றேன் :-)

      Delete
  2. நல்லாருக்கு சக்தி .

    ReplyDelete
  3. அரவிந்தனின் வருமானமும், பொருளாதாரப் பாதுகாப்பும் ,இனி கிடைக்கபோகும் ஓய்வும் ராகினியின் எண்ணத்தை மாற்ற, ராகினி டிவோர்ஸ் எண்ணத்தை டிவோர்ஸ் பண்ணிடுவார்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு முடிவு அப்படி தோணுதா? அடடே... உண்மையில் முடிவை அவங்க அவங்க கற்பனைக்கு விட்டுட்டேன்.. :-))

      Delete
  4. எதிர்கால இந்தியா பற்றிய நல்ல கனவு, ஆராய்ச்சியாளர்கள் முன்னேறத் தனிமனிதர்களின் பொறாமைத் தடங்கல்கள், கடைசியில், நகைச்சுவையான முடிவு. பாவம் மனுஷன்......! நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஒரு சில நொடிகளில் வெளிநாட்டு வாசம் கொண்டு வந்துவிட்டீர் ....நல்ல நடை ,அருமையான கரு .மேலும் எழுதுங்க வாழ்த்துக்கள் சக்தி :)

    ReplyDelete
  6. நல்லா இருக்குவே ;-)) "அரவிந்தன் கடுப்புடன் குறுக்கிட்டு "நீங்க அனாவசியமா ஏதேதோ பேசுறீங்க மோகன்" என்றார்." இந்த வார்த்தைல சுஜாதா சயால் தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிவே.. :-)) நமக்குன்னு ஒரு ஸ்டைல் எல்லாம் வருமா என்ன? எங்கோ யாரோ எழுதின ஸ்டைல் எல்லாம் மிக்ஸ் ஆகி வரும்.. :-))

      Delete
  7. அறிவியல் புனைவு வரிசையில் சிறப்பான ஒரு கதை.
    கருவும், அதைச் சொன்ன விதமும் ரொம்ப நச்!

    குறைனு பாத்தா, உங்களுக்கே இது தோணிருக்கும்னு நினைக்கிறேன். சுஜாதாவின் பெயரை என்னாலும் தவிர்க்க முடியல. அவரோட ’டச்’ இருக்கு.

    2020-லேயே இந்தியா மாறிடுச்சு, ப்ளா..ப்ளா -லாம் அப்டியே ‘சிவாஜி கிளைமேக்ஸ்’ கணக்கா இருந்துச்சு.

    கற்பனைக்கு எல்லை இல்லைனு வச்சுக்கிட்டா அதையும் தப்புனு சொல்ல முடியாது.

    உங்களின் அடுத்த சிறுகதையையும் ஆவலோடு எதிர்பார்க்கத் தூண்டியது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

    கடைசி குறிப்பு: நான்லாம் உருப்படியா ஒரு கதையும் எழுதியதில்லை என்பதையும் குறிப்பிட்டுட்டேன்..


    அன்பன்,
    தமிழ்

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா படிச்ச எல்லாருக்குமே விஞ்ஞான புனைவு என்றவுடன் அவர் ஞாபகம் வரும் தான்.. அது எழுதுற எனக்கும் பொருந்தும். பாதிப்பு கண்டிப்பா இருந்து இருக்கும். :-) அடுத்த முறை எழுதினால், கண்டிப்பா மாற்றிக் கொள்ள பாக்குறேன். :-) நன்றி :-))

      Delete
  8. very nice. முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். சில விஷயங்களை குறிப்பிடத் தோன்றுகிறது. ஒரு இரண்டு மூன்று சிறுகதைகளுக்கான கரு இதில் இருக்கிறது. எல்லா வியப்புகளையும் ஆச்சர்யங்களையும் எழுத்தாளரே விளக்காமல் வாசகர் உணரும்படி விட்டு விடுதல் நலம். கதையின் நீளத்தை கருத்தில் கொள்ளவும். மனைவியின் நிராசையை கடைசி வரியில் மட்டும் வெளிப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடும். (குறை சொல்லி பேர் வாங்கும் புலவராக நினைக்க வேண்டாம். Science fiction guru சுஜாதா சொன்னதுதான்.)

    மற்றபடி முதல் முயற்சி என்பதே தோன்றாத அளவு expertise தெரிகிறது.


    ReplyDelete
    Replies
    1. நன்றி :-)) 2,3 கரு என் கண்ணுக்கு கூட தெரியலையே.. ஙே... கதை நீளம் கொஞ்சம் அதிகம் தான். அடுத்து எழுதினால், கவனித்தில் கொள்கிறேன்... :-)

      Delete
  9. " ezhuthinal" endru yaen solreenga? nichayam ezhuthungal. u have that skill. ( relationship between that scientist and his wife, relationship between scientist and boss, relationship between scientist and that technology alone. each of these can be developed as one short story. amaam thaane? )

    ReplyDelete
    Replies
    1. அடுத்து (என் மனசுக்கு)ஒரு நல்ல கதை தோணினா தான எழுத முடியும்?!! :-) ஆமாம்.

      Delete
  10. நல்ல நடை, கரு. வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்க.
    கொஞ்சம் வித்தியாசமான கதை தான்

    வளர்ந்த இந்தியா, வழக்கமாக மாறா அரசு அலுவலகம்... #இடிக்குதே
    சொத்து அடகு வைத்தல்... இது எல்லாம் மாறி விடும் அந்த காலத்தில். Lots of funding there, now itself.
    ஊழல் இல்ல, ஆனா /தன்னை மிதித்துவிட்டு வளர்ந்த/ எப்படி ?

    Climax - கச்சிதமாக (வரும் முன்னே) யூகீத்து விட்டேன். #டமில்சினிமா_Touch

    (#CommentLikeThamizh எனக்கு கதை எல்லாம் எழுதவே தெரியாது, இப்படி கமெண்ட தான் தெரியும்...)

    ReplyDelete
    Replies
    1. நன்றி :-)) வளர்ந்த நாட்டுலையும், அரசு அலுவலகங்கள் சரியான நேரத்துக்கு(9-6) மட்டும்,தனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்யுறது இல்லையா?? தனியார் போல் அதிகப்படியா இழுத்து போட்டு செய்வது கிடையாதே.

      ஊழல் இல்லா நாட்டுல கூட,திறமை இல்லாமல்,அதே சமயம் சும்மா பேசியே முன்னேறுபவர்கள் இருக்கத் தான் செய்கிறாகள். நேரிலேயே பார்த்து இருக்கிறேன். :-)

      முடிவுக்கு ஆரம்பத்திலேயே ஒரு துப்பு கொடுத்துவிட்டேன். அடுத்த முறை அதுவும் இருக்காது.. :-)

      Delete
  11. Well done!!

    nice write up..

    ரொம்ப நுணுக்கமா எழுதிருக்க.. நல்லா இருக்கு.

    சில இடங்களில் கட்டுரை மாதிரி இருக்குப்பா.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி எழுத ட்ரை பண்ணு. சரியா?
    மற்றபடி வாத்தியார் பாதையில் மற்றொரு மாணாக்கன். (ஒன்னு நான் :)))

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு.. அடுத்த முறை கவனிச்சு எழுதிடுறேன்... :-)))

      Delete
  12. . நம்ம மூளையோட சப்கான்சியஸ்.... "
    "சப்பாத்தி வைக்கவா?"
    சூப்பர் :-)))
    நான் கூட டி எம் ல ஓடற உரையாடலகள் வெளியே தெரிந்தால் எவ்வளவு தர்மசங்கடம் ஆகும் என்று ஒரு ட்வீட் போட்டிருந்தேன் :-) மற்றவர்களுக்கு நம் எண்ணங்கள் தெரிந்தால் அவ்வளவுதான்!அதனால் தான் இறைவன் மனத் திரையை அளித்திருக்கிறான்.
    சுவாரசியமான் கதை :-)

    amas32

    ReplyDelete
  13. உங்க கதை சூப்பர்....................


    ReplyDelete