Categories

Tuesday 30 July 2013

தாலாட்டு...

தாலாட்டு என்ற இலக்கிய வகை நம் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று... தால் என்றால் நாக்கு... நாக்கை ஆட்டிப் பாடுவதால் இது தால்+ஆட்டு= தாலாட்டு என்று ஆனது என்று ஆறாம் வகுப்பு செய்யுள் பகுதியில் படித்த ஞாபகம்.







எனக்கு எல்லாம் சின்ன வயசில் என் பாட்டி தாலாட்டு பாடி தூங்க வைத்து தான் பழக்கம். ஒரே சீரான ராகத்தில், வெவ்வேறு வார்த்தைகளை போட்டு உடனடியாக புதுப்புது தாலாட்டு இயற்றிவிடுவார்கள். தாலாட்டு என்பது தூங்க வைப்பது மட்டும் அல்லாமல் நம் குடும்பம்,முன்னோர் பற்றிய கதை மற்றும் தகவல்களைச் சொல்ல ஒரு கருவியாகவும் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். நான் பிறப்பதற்கு 20 வருடங்கள் முன்னே இறந்து போன என் முப்பாட்டனார் பற்றிய தகவல் எல்லாம் எனக்கு தெரிவதற்கு தாலாட்டு தான் காரணம்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தாலாட்டு இலக்கியம் தற்பொழுது அழிந்து வருகிறது. இன்றைய தலைமுறையில், பலர் முன்னிலையில் பாட சங்கடப்பட்டு கொண்டு சிலரும், நமது மூதாதையர் பயன்படுத்தியதாலேயே இளக்காரமாக சிலரும், இதெல்லாம் இந்த காலத்துக்கு தேவையான என எண்ணிச் சிலரும் ஒதுக்குகின்றனர்.

இன்னும் சிலர் தன் குழந்தையை தூங்க வைக்க தற்கால சினிமா பாடல்களை போட்டு விடுகின்றனர். சமீபகாலமாக பிறந்த குழந்தைகள் "வா வா என் தேவதையே"(அபியும் நானும்), ஆராரி ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ(சிறுத்தை) கேட்காமல் தூங்கி இருப்பார்களோ என்பது சந்தேகம் தான். இதைக் கூட ஒரு வகையில் சேர்த்து கொள்ளலாம் பீத்தோவன் இசையும், டைட்டாணிக் தீம் மூசிக் போட்டு தூங்க வைக்கும் கூட்டமும் இங்கு இருக்கிறது. "எதுவா இருந்தா என்ன தூங்கினா பத்தாதா?" என்பது அவர்கள் நியாயம்.

என் தம்பிக்கெல்லாம் எந்நேரமும் "தா பூ தாமரைப் பூ" என்று பாடி பாடியே அவன் கையால் சைகை செய்ய பழக்கினோம். இப்போ எல்லாம் "How to increase Infant activity" என்ற குறுந்தகடு 1000ரூபாய்க்கு விற்றால் வாங்கி பார்க்க தயாராக இருக்கிறார்கள். இந்தியாவுல மருத்துவமும்,சுகாதாரமும் வேண்டுமென்றால் சரியாக இல்லை எனக் கூறலாம். 120 கோடி குழந்தைகள் பிறந்த இந்தியாவை விடவா வெள்ளைக்காரங்க பிள்ளையை ஒழுங்கா வளர்த்திட போறாங்கன்னு தோனுது. இதிலையுமா ஆங்கில மோகம்?

சரி விடுங்க. அதெல்லாம் அவங்கவங்க விருப்பம். ஆனா, ஒரு சிலருக்கு தாலாட்டு பாட விருப்பம் இருக்கும் ஆனா என்ன பாடுறதுன்னு தெரியாது. அவங்களுக்காக தான் இந்த பட்டி. ட்விட்டரில்,இந்த #TamilThaalaattu பட்டியில் சில தாலாட்டுகளை தொகுத்து வழங்கலாம் என இருக்கிறேன். போய் பாருங்க.

எது எப்படியோ.. வருங்காலத்துல என் பிள்ளைங்க தாலாட்டு இல்லாம வளர மாட்டாங்க :-))

Img Source: http://www.harmonichealth.net/uploads/media/sleeping%20child.jpg Thanks :-) 

No comments:

Post a Comment