Categories

Friday 15 July 2016

ஊஞ்சல் மண்டபம்

இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். வழக்கமாகப் போகும் கோவில் என்றாலும், பலமுறை அந்த மண்டபத்தை பார்த்து உள்ளே சென்று இருந்தாலும், இன்று தான் அந்த மண்டபத்தை சற்று பொறுமையாக பார்த்து ரசித்தேன். மேலும் அதன் வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இங்கே பதிவாய் இடவுள்ளேன்.  ஏற்கனவே, அந்த வரலாறு அங்கே ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தாலும், பல முறை கோவிலுக்குச் சென்ற என் போன்றவர்களே பார்க்கவில்லை எனும் போது, அதை இணையத்தில் பதிவதன் மூலம் இன்னும் சிலருக்கு சென்றடையும் எனத் தோன்றிதால் எழுதப்பட்டதே இப்பதிவு.


மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுர வாசல் வழியாக நுழைந்து 100-150 அடி வரை சென்றால் வலப்பக்கமாக உள்ளடங்கியபடி வரும் சின்ன மண்டபம் தான் ஊஞ்சல் மண்டபம். பொற்றாமரை தெப்பக்குளத்தின் மீது கட்டப்பட்ட ஒரே மண்டபம் இது தான். இம்மண்டபம் 1563ஆம் ஆண்டு செட்டியப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் தான் சிவன்-மீனாட்சியம்மை சிலைகள் வைத்து ஊஞ்சலாட்டும் நிகழ்வு வழமையாக வெள்ளியன்று மாலை நடக்கும். மேலும், பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் விழாக்களும் நடக்கும். அதற்காகவே, அங்கு வெவ்வேறு எழுத்துகளில் தொடங்கும் கடவுளின் பெயர்கள் ஒரு பலகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட என்னைக் கவர்ந்தது, அம்மண்டபத்தின் விதானத்தில் வரையப்பட்டுள்ள திருக்கல்யாண ஓவியம் தான். அது, இன்று,நேற்று வரையப்பட்டது அல்ல. 17ஆம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சியில் வரையப்பட்டு இன்று வரை அழியாமல் உள்ள ஓவியம். அந்த காலத்து மனிதர்களின் உருவத்தையே பார்த்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதெனக்கு. அங்குள்ள இரு தூண்களில் ராணி மங்கம்மாள் & அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆகியோரது சிலை வடிவமும் உள்ளது. 

பல நூற்றாண்டுகளை தாண்டியும் இன்னும் சிறப்புடன் திகழும் அந்த ஓவியத்தின் சில பகுதிகள் மட்டும் சேதமடைந்ததுள்ளது. இத்தகைய வரலாற்றுக் கலை வடிவங்கள் தான் நாம் யார்? நாம் மதித்து நிற்கும் இந்த மண்ணின் மீது நின்று, வாழ்ந்து, பயணம் செய்த நம் மூத்தகுடிகளின் பெருமையும், உண்மையும் விளங்கச் செய்து, நமது இருப்பை ஒரு உணர்வுப்பூர்வமான இறுமாப்புடன் உணரச் செய்யும். தொல்லியல் துறையும், அறநிலையத் துறையும் இது போன்ற வரலாற்றுச் சின்னங்களை மேலும் அக்கறையுடன் பாதுகாத்தல் அவசியம் எனத் தோன்றுகிறது. இது நடக்குமா எனத் தெரியாது. ஆனால், இன்று அந்த ஓவியம் ஏற்படுத்திய பெருமித அதிர்வலையில் மிதந்து ஊஞ்சாலாடிய படியே உங்கள் முன் இப்பதிவுடன் நான்... 

1 comment: