Categories

Wednesday, 14 September 2016

அகக் கடல் தான் பொங்குவதேன்? - ஒரு பயணக் கட்டுரை

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?" என்ற பொன்னியின் செல்வனின் பாடல் வரியைத் தான் என் மனதும் பாடிக் கொண்டிருந்தது... ஆனால், பூங்குழலியின் சோகம் போல அல்லாமல் என் அகக் கடலாகிய மனம் பொங்க குதூகலமே காரணமாய் இருந்தது... 


அதற்கு காரணமும் ஒரு சிறிய கடற் பயணம் தான். அதுவும் ஒரு அந்தி வேளை தான். தென்றல் வீசிக் கொண்டிருந்தது. அலுவலக நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக சென்னை துறைமுகத்திற்கு சென்றிருந்தோம். பணி நிமித்தமாக அன்றி ஒரு சிறிய இன்ப சுற்றுலா. பாய் மரப் படகில் ஒரு இரண்டு மணி நேரப் பயணம். அப்பயணம் எப்படி இருக்கமென்ற ஆவலே என் குதூகலத்திற்கு காரணம்.

Sailing என்ற விளையாட்டை ஊக்கப்படுத்தும் ஒரு சங்கம் ஆகிய Royal Madras Yatch Club மூலமாக தான் நாங்கள் அந்த பயணத்தை மேற்கொண்டோம். 1910ல் ஃபிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் இன்று வரை பல பாய் மர படகு விளையாட்டு வீரர்களை இந்தியாவிற்காக உருவாக்கியுள்ளது. அவர்களும் தேசிய, ஆசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நவீன பாய் மர படகில் பயணம் என்பது ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்ற நினைப்பை இந்த சுற்றுலா மாற்றியது. மேலும் இங்கு பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாகவே இருந்தன. அனைவருக்கும் தனித்தனியே Life Jacket கொடுத்தனர். துறைமுக எல்லைக்குள் இருப்பதால் இங்கு வந்து செல்ல பாதுகாப்பு கிடுக்குபிடிகள் கொஞ்சம் அதிகமே.

இங்கு 6 வயது முதல் சிறுவர், சிறுமியர் பயிற்சி பெறுகின்றனர். அனைவரும் அவர்களது படகை தானாகவே தயார் செய்யுவும், செலுத்தவும், சரி செய்யவும் சொல்லித் தருகின்றனர். ஒற்றை பாய் மர படகு, இரட்டை பாய் மர படகு, இயந்திர படகு, சொகுசு படகு(Yacht) எனப் பல வகை உள்ளன. அனைத்தும் சில லட்சங்களில் தொடங்கி சில கோடிகள் வரை மதிப்புடையவை. இதனால், பயிற்சிக்கான செலவும் அதிகம் தான். நாங்கள் பேசிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு தனியார் மூலம் படித்தபடியே பயிற்சி மேற்கொள்கிறான்.



நாங்கள் இரட்டை பாய் மர படகு ஒன்றில் பயணம் செய்தோம். அதன் பெயர் "Sea bird" என்றார்கள். ஆம். அதுவும் ஒரு கடல் பறவை போல தான் கடல் மீது லாவகமாய் சென்றது.

அனைத்து படகு வகைகளிலும் பாய் மர படகு தான் இயற்கையோடு ஒன்றிய படகு வகை. எந்தவித செயற்கை சக்தியுமின்றி வெறும் காற்றை மட்டும் கொண்டு இயங்கும் படகு. நாம் நினைத்தவுடன் வேகமாக இயக்க முடியாது. காற்றின் வேகத்தை வைத்து தான் இயக்கவோ/நிறுத்தவோ முடியும். இதில் பாய்மரம் காற்றை கையாளும் ஒரு கருவி மட்டுமே.பாய் மர படகு வீரர்கள் தங்கள் உடல் எடையையும் ஒரு கருவியாய் பயன்படுத்தி படகின் வேகத்தை கட்டுக்குள் வைப்பார்கள். கிட்டத்தட்ட பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஒரு வாலிபனை போல செல்வார்கள்.

இந்த இரட்டை பாய் மரத்தில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருக்கும். படகு சீராக செல்ல இரண்டு பாய் மரமும் ஒரே திசையில் இருக்க வேண்டும். 

படகில் ஏறியதும் படகு தந்த ஆட்டமும்,அலை ஏற்படுத்திய அதிர்வும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், சிறிது நேரத்தில் படகு பயணம் சுக அனுபவமாக மாறுகிறது. நாங்கள் சென்ற படகின் படகோட்டி ஒரு முதியவர். தனது அனுபவங்களையும் கடல்/கப்பல் சார்ந்த தகவல்களையும் பகிர்ந்தபடியே வந்தார். சுமார் 30 வருடமாக இங்கே பாய் மர படகு ஓட்டுவதாகவும் சொன்னார். மழை மேகம்  கூடி சாரல் மழை பெய்ய துவங்கி இருந்தது. மகுடி ஓசைக்கு ஆடும் பாம்பு போல, காற்றிற்கு ஏற்றாற் போல படகு சென்று கொண்டிருந்தது. சாரல் மழை, அலைகளின் ஓசை இரண்டுமே எங்கள் எல்லோர் மனதிலும் மேலும் கொஞ்சம் நிம்மதி அலைகளை பரவச் செய்திருந்தது. 

படகோட்டி, நாங்கள், மேல் தட்டு மக்கள் என அனைவரும் படகில் பல விஷயங்களை பேசிக் கொண்டு வந்தோம். இத்தனை ஏற்றத்தாழ்வுகளையும் ஒரே மாதிரி கையாண்டு படகு சென்று கொண்டிருந்தது. படகோட்டியிடம் விசாரித்ததில் ஒரு மணி நேரம் குளிரூட்டப்பட்ட சொகுசு படகில் செல்ல 10-15 ஆயிரம் ஆகும் என்றார். ஆனால், பாய் மர படகில் செல்ல அவ்வளவு செலவு இல்லை. கிட்டதட்ட 2-3 மணி நேரம் பாய் மரப் படகில் பயணிக்க ஒருவருக்கு 500 ரூபாய் அல்லது 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு (சிற்றுண்டி அல்லது உணவுடன்) 1500-1800 வரை ஆகுமாம். அதுவும் கூடவே ஒரு பாதுகாப்புக்கான ரோந்து கப்பலும் வரும் என்றார்கள். இணையதளத்தில் படித்ததில் உறுப்பினர் ஆக 1.5 லட்சம் ஆகுமென போட்டிருந்தார்கள். ஏழை/நடுத்தர மக்களுக்கு அது ஒரு பெருந்தொகை. ஆனால், பெரு நகரத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குடும்பத்துடன் ஒரு படத்துக்கு சென்று வரவே 1000-1500 வரை ஆகும். அதோடு ஒப்பிடும்போது ஒரு முறை குடும்பத்துடன் இங்கு சென்று வருவது சிறந்த பொழுது போக்குடன் கூடிய நல்ல அனுபவமாய் இருக்கும் எனத் தோன்றியது. இயந்திர வாழ்க்கைக்கு இடையில் ஒரு நாளில், சென்னைக்குள் இப்படி ஒரு பயணம் என்ற நினைப்பே ஆசுவாசமாய் உள்ளது. நான் கண்டிப்பாக என் குடும்பத்துடன் இன்னொரு முறை அங்கு செல்வேன். உங்களுடனும் பகிர்ந்து கொண்டால் நீங்களும் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று தான் என் அகக் கடலும் இப்பதிவை எழுத பொங்கியதோ!! 

பி.கு: Royal Madras Yacht Clubன் இணைய தள முகவரி www.rmyc.in

No comments:

Post a Comment