Categories

Monday 26 December 2016

மதுரைக் காஞ்சி - ஒரு பயணக் கட்டுரை

வீட்டு மனை விற்பனையாளர்கள் சொல்வதைப் போல 'சென்னைக்கு மிக அருகிலுள்ள' காஞ்சிபுரத்தை நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கண்டதில்லை. சமீபத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு அமையவே, அரை நாள் பயணமாக காஞ்சிபுரம் சென்றேன்.





ஆதித்த கரிகாலன் காஞ்சியில் மாளிகை கட்டி ஆண்டு வந்தான் என்பதை  பொன்னியின் செல்வனில் படித்திருக்கிறேன்.அதைத் தவிர எனக்கு காஞ்சிபுரம் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. சிறு வயதில் பெற்றோருடன் ஒரு முறை காஞ்சிக்கு சென்றுள்ளேன் என்றாலும், என் பால்யத்தில் விழுந்த என் முதல் பல்லை எங்கு புதைத்தேன் என்பது எந்த அளவிற்கு மறந்திருக்கிறேனோ அந்த அளவிற்கு காஞ்சியை மறந்திருக்கிறேன். எனவே, இது கிட்டதட்ட என் முதல் பயணம் தான் இந்த சிறு நகருக்கு. சென்னையில் மதியம் ஏறி அமர்ந்து, நாஞ்சில் நாடனின் 'சாலப் பிரிந்து' எனும் சிறுகதைத் தொகுப்பை படித்தபடி என் பயணத்தை தொடங்கினேன். நாஞ்சில் நாட்டின் வனப்பையும், பல ஊர் மனிதர்கள்/பயணங்களை பற்றி கதைகளும் படித்தவாறே சென்றதில் எனது ஊரான மதுரை பற்றிய நினைவுகளும், காஞ்சி பற்றிய எதிர்பார்ப்புகளும் கைகோர்த்தபடியே காதலர்கள் போல பேருந்தில் மிதந்து வந்தன.  வாலாஜாபாத், நசரத்பேட்டை தாண்டி பேருந்து காஞ்சிபுர எல்லைக்குள் நுழையும்போதே, ஓச்சேரி பாய் பிரியாணி கடை என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது. காஞ்சிபுர நண்பரொருவர் முன்பே ஓச்சேரி பாய் பிரியாணி கடை காஞ்சிபுரத்தில் மிகப் பிரபலம் என்றும், மிகுந்த சுவையுடனும், மிகச் சிறிய கடையாய் இருக்குமென்றும் சொன்ன நினைவு தட்டியது. பின்னர் நண்பரிடம் விசாரித்ததில், நான் பார்த்தது அசல் கடை இல்லையென்பது தெரிய வந்தது. இது போலவே, மதுரையிலும் கீழவாசல் பேமஸ் ஜிகர்தண்டா போலவே பல போலிகள் முளைத்துவிட்டது நினைவு வந்தது. காஞ்சி நகர் பகுதிக்குள் செல்லும் பொழுதே, பெரிய கோவில் கோபுரம் ஒன்றைக் கண்டேன். அந்த பெரிய மதிலின் நீளம் கண்டு, அது காஞ்சி காமாட்சியம்மன் கோவிலென முடிவு கட்டிவிட்டு, அருகிலுள்ள பயணியிடம் கேட்டேன். அவர் அது வரதராஜ பெருமாள் என்றார். அட, இதுவும் மதுரை போல ஒரு கோவில் நகரம் தான் என எண்ணினேன். மேலும், பெருமாள் கோவிலே இவ்வளவு பெரிதாய் இருக்கும் பொழுது, காமாட்சி கோவில் மீது எதிர்பார்ப்பு எகிறியது. நகருக்குள் செல்லும் வழியில் பல இடங்களில் பச்சையப்பா பள்ளிகள், கல்லூரிகள் இருந்தன. அவர் தம் காலத்தில் காஞ்சிக்கு பல நற்பணிகளை செய்துள்ளார் என்பது புரிந்தது. சாலை ஒன்றுக்கு வள்ளல் பச்சையப்பா சாலை என்று பெயரிட்டுள்ளனர். பின்னர், காமராஜர் வீதி, காந்தி சாலை வழியாக பேருந்து சென்றது. இங்கு தான் பெரும்பாலான பட்டுக் கூட்டுறவு சங்கங்களும், கடைகளும் இருந்தன. இதை நகரின் முக்கிய கடை வீதி எனச் சொல்லாம். ஆனால், மதுரையின் நேதாஜி ரோடு அளவு இங்கு அவ்வளவு நெருக்கடி இல்லை. மதுரையின் கீழ சித்திரை வீதி, வடக்கு வெளி வீதி என கோவிலைச் சுற்றி எல்லா வீதிகளும் திசைகளை தன் பெயருடன் இணைத்திருக்கும். அது போலவே, காஞ்சிபுரத்திலும் கிழக்கு ராஜ வீதி, மாட வீதி என பல வீதிகள் உள்ளன.

பேருந்து நிலையத்தில் இறங்கி எனது பணிகளை முடிக்க மாலை ஆகியது. சரி நேரம் இருக்கிறதே, கையோடு காமாட்சியம்மனையும் தரிசிக்கலாம் என கூகிளாரிடம் வழி வினவினேன். பேருந்து நிலையத்திலிருந்து சில நூறு மீட்டரே இருந்ததால், நடந்தே கோவிலை அடைந்தேன். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி என சேர்த்தே கூறுவார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த கோவில் பார்ப்பதற்கு வாயைப் பிளக்கும் அளவு இருக்குமென்று எண்ணினேன். ஆனால், எதிர்பார்த்தளவு கோயில் பெரிதாக இல்லை. கூட்டமும் பெரிதாக இல்லை. 15 நிமிடத்தில் மொத்த கோவிலும் சுற்றிவிட்டு அமர்ந்துவிட்டோம். மதுரை மீனாட்சியுடன் ஒப்பிடும்போது காஞ்சி காமாட்சிக்கு இடப் பற்றாகுறை தான். காஞ்சி மகா பெரியவர் மடம் கோவிலை பல மடங்கு  விரிவுபடுத்திருப்பார்களென நினைத்தேன். ஆனால், அவர்களின் கல்லூரிகளை விட கோயில் அளவு சிறிய அளவில் தான் உள்ளது. ஆனால், இதை விட அதற்கு முன்னால் இருந்த ஆதி காமாட்சியம்மன் கோயில் இன்னும் சிறியது என நண்பர் கூறினார். காமாட்சியம்மன் கோவிலைச் சுற்றி 4 பெரிய பெருமாள் கோவில்கள் உள்ளன. மேலும், ஊர் முழுதும் சிவன்/ பெருமாள் கோவில்கள், தெருக்கள் என மாறி மாறி உள்ளன. மேலும், ஊருக்கு வெளியே நசரத்பேட்டை உள்ளதையும் சேர்த்து பார்க்கும் பொழுது, காஞ்சிபுரம் முந்தைய காலத்தில் ஒரு சமயச் சண்டை மைதானமாக இருந்தாகவே தோன்றுகிறது. பட்டுக்கு மிகவும் பெயர் பெற்ற இவ்வூரில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் உட்பட பல கூட்டுறவு சங்கங்கள் காமராஜர் வீதி, காந்தி ரோட்டில் தென்பட்டன. திரும்பி பேருந்தில் வரும் வழியில் அண்ணா நினைவு இல்லத்தைப் பார்க்க நேர்ந்தது.  பின்னர், வீட்டுக்கு வந்த பின் பொறுமையாக கூகிளில் தேடிய பின் தான், அண்ணா காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த வீடு அவர் வாழ்ந்த வீடு எனவும் தெரிந்துகொண்டேன். காஞ்சியும், மதுரை போலவே கொஞ்சம் பழமை மாறாமல் உள்ளது. மதுரையை விடவும் அதிக அளவில் ஓட்டு வீடுகளை காண முடிந்தது. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் எல்லாம் இந்த சிறுநகரத்தை இன்னும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. உணவு மற்றும் இதர பொருட்களின் விலை சென்னையை விட மிகக் குறைவாகவே உள்ளது. சிங்கப்பூரில் வாழும் தமிழர் சிலர் விலை மலிவு என்பதால் மலேசியாவிற்கு சென்று பொருட்கள் வாங்கி வருவர். அது போல, சென்னை மக்களும் காஞ்சிபுரத்துக்கு போய் வரலாம் எனத் தோன்றியது. 

மீண்டும், திரும்பும் வழியில் வரதராஜ பெருமாளின் கோவில் மதில் என்னை மறுமுறை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்னொரு முறை இந்நகருக்கு வரும் ஈர்பபையும் ஏற்படுத்தியது.

பொறுப்பு துறப்பு: மதுரைக் காஞ்சி என்ற இலக்கியத்திற்கும், இக்கட்டுரைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மதுரைக்காரனின் கண் வழியே ஒரு காஞ்சி பயணக் கட்டுரை என்பதாலேயே இந்த தலைப்பு. உங்கள் கற்பனைக்கு கம்பேனி பொறுப்பாகாது :-)

No comments:

Post a Comment