Categories

Friday, 21 July 2017

சிறந்த மாதாந்திர வருமானத் திட்டம்

நம் அன்றாட வாழ்வில் பல மாதாந்திர வருமானத் திட்டங்களை கடந்து இருப்போம். சில திட்டங்களில் முதலீடு செய்து இருப்போம். எந்தத் திட்டம் மிக சிறந்தது என ஆராய்ந்து முடிவு எடுக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைவதில்லை. எனவே அந்தந்த தேவைகளின் போது நமக்கு கிடைக்கிற அறிவுரைகளின் அடிப்படையில் முதலீடு செய்கிறோம்.



தனியாரின் முதலீட்டுத் திட்டங்கள் பொதுவாகவே அதிக விளம்பரங்கள் மூலம் பரப்படுகின்றன. ஆனால், அதை விட சிறந்த திட்டங்கள் அரசு நிறுவனங்கள் அறிமுகம் செய்திருக்கும். இருந்தும் அவை போதிய விளம்பரமின்மையால், பொதுமக்களை சரியாக சென்று அடைவதில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு திட்டமே. நிற்க.

150ஆண்டு பழமை வாய்ந்தது இந்திய தபால் துறை. ஆங்கிலேய காலந்தொட்டே பல கிளைகள் பரப்பி இந்தியாவின் எல்லாத் திக்கும் தொட்டு இருப்பதால், சுதந்திரம் அடைந்த பின்னர் தபால் துறை தபால்களை மட்டும் அனுப்பாமல்அரசின் திட்டங்களையும் மக்களுக்கு அனுப்பும் அரசு நிறுவனம் ஆனது.



அப்படி ஒரு திட்டம் தான், தபால்துறையின் மாதாந்திர வருமானத் திட்டம்(Post Office Monthly Income Scheme). முதலீட்டார்களுக்கு அதிக லாபம் தரும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


  • இதில் குறைந்தபட்சம் 1500 தொடங்கி முதலீடு செய்யலாம்.
  • 10 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம்.அவர்களுக்கு 3 லட்சம் உச்சவரம்பு.
  • 18 வயது நிரம்பிய தனி நபர்க்கு 4.5 லட்சம் உச்சவரம்பு.
  • ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டுக் கணக்கு(Joint Account) மூலம் தொடங்கும்போது 9 லட்சம் உச்சவரம்பு.
  • 1 ஜூலை 2017ல் அறிவித்தபடி 7.5% வட்டி தரப்படும். இது மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசால் மாற்றப்படும்.
  • நமது முதலீடு 5 வருடத்தில் முதிர்ச்சி அடையும். 
  • இத்திட்டத்தில் முதலீடு செய்ய தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருத்தல் அவசியம்.
  • மாதாந்திர வட்டி மாதாமாதம் நமது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • வாரிசுதாரரை நியமிக்க இத்திட்டத்தில் வழி உண்டு.
  • இந்தத் திட்டத்திற்கு எந்த வருமான வரி விலக்கும் இல்லை.
  • குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்த பணத்தை எடுக்கமுடியாது.
  • முதிர்ச்சிக்கு முன், 1 முதல் 3 வருடம் வரை பணத்தை எடுக்கும்போது 2% அபராதம் விதிக்கப்படும். உதா: 1 லட்சம் முதலீடு செய்துவிட்டு 2.5 வருடத்தில் பணத்தை எடுத்துவிட்டால் உங்களுக்கு 98000 மட்டுமே தரப்படும். ஆனால், இந்த  2.5 வருடத்தில் வட்டி மூலம் 18750 வருவாய் வந்து இருக்கும்.
  • முதிர்ச்சிக்கு முன், 3 முதல் 5 வருடம் வரை பணத்தை எடுக்கும்போது 1% அபராதம் விதிக்கப்படும். உதா: 1 லட்சம் முதலீடு செய்துவிட்டு 3.5 வருடத்தில் பணத்தை எடுத்துவிட்டால் உங்களுக்கு 99000 மட்டுமே தரப்படும். ஆனால், இந்த  3.5 வருடத்தில் வட்டி மூலம் 26250 வருவாய் வந்து இருக்கும்.



மற்ற திட்டங்களுடன் ஒரு ஒப்பீடு கீழே,


நிலையான வைப்பு நிதியை(FD) விட அதிக வட்டியை இத்திட்டம் தருகிறது. தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) அதிக லாபம் கொடுத்தாலும், அதில் இருந்து பாதியில் வெளியேற முடியாது. மேலும் மாதாமாதம் வட்டியும் கிடைக்காது.

மேலும், எனக்கு மாத வட்டி தேவையில்லை. நான் எதிர்பார்ப்பது நீண்ட கால முதலீடு என்பவர்களுக்கு தபால் துறை மேலும் ஒரு வசதியை வழங்குகிறது. உங்கள் மாத வட்டியை மீள் வைப்பு நிதியாக(Recurring Deposit) மாற்றிக் கொள்ளலாம். அப்படி செய்யும்பொழுது, உங்கள் வட்டி மேலும் குட்டி போடும் :-) 1 லட்சம் 5 வருடத்தில் 1.45 லட்சமாக மாறி இருக்கும்.

இது போக, இன்னொரு கூட்டம் ஒன்னு இருக்கு. அவங்களுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. முதலீடு பாதுகாப்பாவும் இருக்கணும், வருமானமும் அதிகம் வரணும். அந்த மாதிரி ஆட்கள் இதில் வரும் மாத வட்டியை, Systematic Investment Plan என்கிற முறையான முதலீட்டு திட்டம் மூலம் பங்குச் சந்தையிலோ, பரஸ்பர நிதியிலோ(MF) முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். உதா: 1 லட்சம் இந்த திட்டத்தில் போட்டால் மாதம் 625ரூ வரும். அதை பரஸ்பர நிதியில் 5 ஆண்டு போட்டு வந்து 15% லாபம் தரும் பட்சத்தில், உங்கள் 1 லட்சம் 1.56 லட்சமாக மாறி இருக்கும். 

எனவே, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், கையில் உபரியாக பணம் வைத்து இருப்பவர்களுக்கும், முதலீடுக்கு மோசமின்றி நிலையான வருமானம் தேடுபவர்க்கும் இந்த மாதாந்திர வருமானத்திட்டம் சிறந்த திட்டமாகும்.

மேலும், இது போன்ற சில திட்டங்களை பற்றி இங்கு எழுதவுள்ளேன். எனவே, இந்த வலைபதிவு பக்கத்தின் மீது உங்கள் கண்கள் இருக்கட்டும் :-)


No comments:

Post a Comment