Categories

Saturday, 15 July 2017

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

தங்கம்.... தங்கம் என்பது என்ன? ஒரு உலோகம். அவ்வளவு தான்... இப்படி சும்மா கடந்திட முடியலையே... ஏன்?

உலகத்துல உற்பத்தி பண்ற தங்கத்துல 28% தங்கத்தை இந்தியர்கள் தான் வாங்குறதா புள்ளிவிவரம் சொல்லுது. அது ஏன் நமக்கு தங்கத்துக்கு மேல இவ்வளவு ஆர்வம்? பெண்களுக்கு தங்கத்து மேல ஈர்ப்பு இருக்குனா, அதுக்கு கூட ஒரு நியாயம் இருக்கு. அவங்க அதை ஒரு அணிகலனா பாக்குறாங்க. அணியுறாங்க. கூடவே பக்கத்து வீட்டு பாட்டி காதுல தொங்குற தண்டட்டி தொடங்கி சந்திரமுகி கொலுசு வரை அவங்களுக்கு தங்கம் பிடிக்க கோடி காரணங்கள் இருக்கும். அது நமக்கு புரியவும் புரியாது. அதனால அதை விட்டுடுவோம். இந்த ஆண்களுக்கு ஏன் தங்கத்துல மோகம்...!!

எல்லாம் அதோட பண மதிப்பு தான் காரணம். ஆண்கள்ல பந்தாவுக்கு தங்கம் அணியுற விதிவிலக்குகளை விட்டுட்டா, மத்த எல்லாருமே தங்கத்தை ஒரு நல்ல முதலீடா தான் பாக்குறாங்க. அதுக்கு காரணமும் இருக்கு. எங்க பாட்டி காலத்துல ஒரு பவுன் 12 ரூபாய் வித்த தங்கம் இப்ப 25000 ரூபாய் விக்குது. அதனால தான் எல்லாருக்கும் தங்கம் ரொம்ப முக்கியமாப் படுது.



தங்கம் அப்படியே தான் இருக்கு. ஆனா அதை சுத்தி இருக்குற உலகம் ரொம்ப மாறிடுச்சு. நம் மனதை நன்கு உணர்ந்த அரசும், எரிவாயு போலவே தங்கம் வாங்கவும் வரியிட்டது. தற்போது கூட ச.சே.வ(G.S.T) மூலம் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்னெல்லாம் ஆடி மாசம் வந்தா தங்க விலை குறையும், தீபாவளி,பொங்கல் வந்தா விலை ஏறும். ஆனா, உலக தாராளமயமாக்கல் தாக்கம் வந்த பிறகு தங்கம் என்பது உலக பங்குச் சந்தையின் பொருளானது. தங்க விற்பனையில் பல மாற்றம் வந்தது. நான் சொல்வது இப்போதுள்ள நகை கடைகளிலுள்ள மாதாந்திர தங்க நகை சேமிப்புத் திட்டத்தைப் பற்றி அல்ல.

தங்கத்தை நகையாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ வாங்காமல், முழுக்க முழுக்க மின் வடிவில்(Electronic Format) தங்கம் வாங்குவதை தான் விளக்க முயல்கிறேன்.

மின் வடிவில் தங்கம் வாங்குவதிலும் பல வழிகள் உண்டு,

௧) தங்க ஈடிஃப்(Gold ETF)
௨) மின்-தங்கம்(E-Gold)
௩) தங்க நிதியின் நிதி (Gold Funds of funds)

நகையாக அணிபவர்கள் தவிர்த்து மற்ற அனைவருமே மின் வடிவில் தங்கம் வாங்கலாம். மின் வடிவில் வாங்குவதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பயன்கள் கிடைக்கும்


  • தங்கத்தின் தரம் பற்றி கவலை இல்லை
  • சேதாரம் & செய்கூலி இல்லை
  • மீண்டும் விற்கும்போது, கழிவு & விலை குறைப்பு பற்றி கவலை இல்லை.
  • தங்கத்தின் பாதுகாப்பு பற்றி கவலையில்லை
  • செல்வ(Wealth) & ச.சே.வ(G.S.T) பற்றி கவலையில்லை

ச.சே.வ(G.S.T) தான் இல்லையே தவிர மற்ற வரிகள் உண்டு. அதை விரிவாக பின்னால் பார்க்கலாம்.

தங்க ஈடிஃப்(Gold ETF):

தங்க ஈடிஃப் என்பது பொருட்களின் சந்தையில்(Commodity Market) தங்க விலையின் ஏற்ற/இறக்கம் அடிப்படையில் ஏறி இறங்கும்.இதில் மின் வடிவில் தங்கம் வாங்க நமக்கு பங்கு வர்த்தக கணக்கு(Demat & Trading account) இருத்தல் அவசியம்.இதில் வாங்கும் தங்கத்திற்கு இணையான அலகுகளைத் தங்கமாக மாற்றிக்கொள்ளலாம். இது குறுகிய கால முதலீட்டுக்கு ஏதுவானது. இதில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் விற்றால், முதலீட்டு ஆதாய வரி(Capital gain tax) கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் போனால் வரி இல்லை. இதில் SIP(Systematic Investment Plan) முறையில் சீரான இடைவெளியில் நமக்கு தேவையான அளவு முதலீடு செய்து கொண்டு வர முடியும்.

மின்-தங்கம்(E-Gold):

மின்-தங்கம் என்பது பங்குச்சந்தை பாதிப்பு இல்லாதது. இதை நிர்வாகம் செய்ய தனி அரசு அமைப்பு உள்ளது(National Spot Exchange platform). இதில் விலை சீராக உயரும்/இறங்கும். இதில் தங்கம் வாங்க நமக்கு பங்கு வர்த்தக கணக்கு(Demat & Trading account) இருத்தல் அவசியம். இது பெண்ணின் திருமணம் போன்ற நீண்ட கால தேவை மற்றும் முதலீடுகளுக்கு சிறந்தது. ஆனால், மூன்று வருடத்திற்கு குறைவாக இதில் செய்த முதலீட்டை எடுக்கும்போது அதற்கு வரி கட்ட வேண்டி வரும்.

தங்க நிதியின் நிதி (Gold Funds of funds):

தங்க நிதியின் நிதி என்பது பரஸ்பர நிதி(mutual fund) மூலம் தங்க ஈடிஃப்பில் முதலீடு செய்வது. இதில் முதலீடு செய்ய பங்கு வர்த்தக கணக்கு தேவையில்லை. இதில் SIP(Systematic Investment Plan) முறையில் சீரான இடைவெளியில் நமக்கு தேவையான அளவு முதலீடு செய்து கொண்டு வர முடியும். இதில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் விற்றால், முதலீட்டு ஆதாய வரி(Capital gain tax) கட்ட வேண்டும். மேலும், இதை பராமரிக்க ஆகும் நிர்வாக செலவுகளை நமது தலையில் கட்டுவார்கள். எனவே, மேல் இருக்கும் முதலீட்டு முறைகளே இதை விட சிறந்தது.

 இது போக நடுவன் அரசின் தங்க வைப்பு திட்டமும்(Gold Deposit Scheme) உள்ளது. 3 முதல் 7 வருடம் வரை முதலீடு செய்யலாம். நம்மிடம் பெட்டியில் உறங்கும் தங்க நகைகளை வைத்துக் கொண்டு அதற்கு வட்டி கொடுப்பார்கள். ஆனால், இதில் வட்டி மிகக் குறைவு. மேலும், நடுவில் நம் தங்கத்தை திரும்ப பெறவும் விதிமுறைகள் உண்டு. இதற்கும் மேலாக, நாம் கொடுக்கும் தங்கத்தை உருக்கி, கழிவு நீக்கி வரும் மீதி தங்கத்திற்கு தான் வட்டி தருவார்கள். எனவே, இது சிறந்த முதலீடு அல்ல.

மின்னும் தங்கத்தில் முதலீடு செய்வதிற்கு பதில் மின்-தங்கத்தில் முதலீடு செய்யலாம். மின்னுவது மட்டும் பொன்னல்ல, மின்னாததும் பொன் தான். பின்ன என்ன! 'தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே....'ன்னு பாடுங்க...

அப்புறம் என்னமோ சொல்லுவாங்களே...ஆங்...பொறுப்பு துறப்பு... இந்த முதலீடு முறைகள் எல்லாம் சந்தை & வரி பாதிப்புகளுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் தீர ஆராய்ந்து முதலீடு செய்யவும். மேற்படி சேதாரங்களுக்கு கம்பேனி பொறுப்பாகாது :P




No comments:

Post a Comment