Categories

Saturday, 19 August 2017

வயோதிக வருவாய் திட்டம்

இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு. பல முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு மாற்றுத் திறனாளிகள் & முதியவர்களுக்கான கவனம் மிகக் குறைவு தான். அவர்கள் இந்த சமூகத்தில் தனிச்சையாக செயல்பட ஏதுவான சூழல் இல்லையென்பதே நிதர்சனம். முதியவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சிறந்த வழிமுறை அல்லது வழிகாட்டுதல்கள் இல்லை.அதுவும் தற்போது சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், வழிக்காட்டுதல் மிக அவசியம்.




எனது முந்தைய சிறந்த மாதாந்திர வருமானத் திட்டம் பதிவில், அந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு சிறந்த திட்டம் என குறிப்பிடவே இல்லை.
ஏனென்றால், மூத்தக் குடிமக்களுக்கு எனச் சிறப்பான திட்டம் உள்ளது. நான் சொல்வது பிரதம மந்திரி வயோதிக வருவாய் திட்டம் பற்றி மட்டுமல்ல!!!. 'மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமும்'(Senior Citizen savings scheme) தான். இதைப் பற்றி எழுத எத்தனித்தபோது தான் பிரதம மந்திரி வயோதிக வருவாய் திட்டம் அறிமுகமானது. சரி, இரண்டையும் சேர்த்தே எழுதலாமென்று தான் இந்த பதிவு.

பிரதம மந்திரி வயோதிக வருவாய் திட்டம்(பிமவவதி):


  • 60 வயது முடிந்த அனைவரும் இதில் சேர தகுதியானவகள்.
  • முதலீட்டுக்கான முதிர்ச்சி கால அளவு 10 வருடம்.அதாவது, நீங்கள் முதலீடு செய்த தொகை உங்கள் கையில்த் திருப்பித் தரப்படும்.
  • LIC மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
  • வட்டியை மாதமாதமோ,காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ, வருடம் ஒரு முறையோ வாங்குவதற்கு தேர்வு செய்துகொள்ளலாம்.
  • குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச முதலீட்டு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



  • 10 வருடத்திற்கும் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8% என உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. சாதாரண வைப்பு நிதியில் இந்த வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ  மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும். அது இந்த திட்டத்தில் இல்லை என்பதே சிறப்பு அம்சம். ஆனால், அதற்கும் ஏதாவது *Conditions Apply உள்ளதா என விசாரித்து தான் முதலீடு செய்ய வேண்டும்.
  • நாம் தேர்வு செய்யும் வட்டித் தவணை அடிப்படையில் வட்டி விகிதம் மாறும். நாம் ரூ.1,50,000 முதலீடு செய்தால்அதற்கான வட்டி அட்டவணை கீழே உள்ளது.

  • நீங்கள் விரும்பும் எந்த வங்கிக் கணக்கிலும் NEFT மூலம் வட்டிப்பணம் வரவு வைக்கப்படும்.
  • 10 வருடத்திற்குள் முதலீடு செய்தவர் இறந்துவிட்டால், அவர் நியமித்த வாரிசுக்கு முதலீட்டுப் பணம் சேரும்.
  • 3 வருடத்திற்கு பிறகு, 75% முதலீட்டுத் தொகையை கடனாகப் பெறலாம். ஆனால் அந்த கடனுக்கான வட்டி நம் வருமானத்தை தின்றுவிடும்.
  • இந்தத் திட்டத்திற்கு எந்த வருமான வரி விலக்கும் இல்லை.
  • இந்தத் திட்டத்தில் ஒரு பின்னடைவு என்றால், அது நீங்கள் நினைத்த நேரத்தில் முதலீடு செய்த பணத்தை எடுக்கமுடியாது. உங்களுக்கோ, உங்களின் துணைக்கோ தீவிர நோய் தாக்கி பணம் தேவைப்பட்டால் மட்டுமே. 2% அபராதம் போக 98% பணம் தருவார்கள். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முன் எந்தெந்த நோய் என பட்டியலை சரிபார்க்கவும்.
அது நிற்க. 'மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்'(Senior Citizen savings scheme) 2004லில் இருந்து நடைமுறையில் உள்ளது. இது, அஞ்சல் துறை மூலம் அறிமுகம் ஆகி, இப்போது கிட்டத்தட்ட 25 வங்கிகள் மூலம் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. ஆனால், இது பல வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கே தெரியாது. வயதானோர் வருவாய்த் திட்டம் கேட்டால், தங்களிடம் உள்ள வைப்பு நிதியைத் தான் அனைவரும் பரிந்துரை செய்கின்றனர். அதில் மூத்தக் குடிமக்களுக்கான வட்டி வெறும் 7.25% தான். சரி.  மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் கீழே உள்ளது.
  • 60 வயது முடிந்த அனைவரும் இதில் சேர தகுதியானவகள். விருப்ப ஓய்வு பெற்ற 55 வயது தாண்டியவர்களும் இதில் முதலீடு செய்யலாம்.
  • இதில் குறைந்தபட்சம் 1000 தொடங்கி 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது பிமவவ திட்டத்தை விட அதிகம்.
  • 1 ஜூலை 2017ல் அறிவித்தபடி 8.3% வட்டி தரப்படும். இது மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசால் மாற்றப்படும். அதிகபட்சமாக 2012-13 காலகட்டத்தில் 9.3% வட்டி விகிதம் இருந்தது.
  • வட்டி 3 மாதத்திற்கு ஒரு முறை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • நமது முதலீடு 5 வருடத்தில் முதிர்ச்சி அடையும். விருப்பப்பட்டால் 8 வருடம் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
  • வாரிசுதாரரை நியமிக்க இத்திட்டத்தில் வழி உண்டு.
  • இந்தத் திட்டத்திற்கு எந்த வருமான வரி விலக்கும் இல்லை.
  • குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்த பணத்தை எடுக்கமுடியாது.
  • முதிர்ச்சிக்கு முன், 1 முதல் 2 வருடம் வரை பணத்தை எடுக்கும்போது 1.5% அபராதம் விதிக்கப்படும். உதா: 1 லட்சம் முதலீடு செய்துவிட்டு 1.5 வருடத்தில் பணத்தை எடுத்துவிட்டால் உங்களுக்கு 98500 மட்டுமே தரப்படும். ஆனால், இந்த  1.5 வருடத்தில் வட்டி மூலம் 18675 வருவாய் வந்து இருக்கும்.
  • முதிர்ச்சிக்கு முன், 2 முதல் 5 வருடம் வரை பணத்தை எடுக்கும்போது 1% அபராதம் விதிக்கப்படும். உதா: 1 லட்சம் முதலீடு செய்துவிட்டு 3.5 வருடத்தில் பணத்தை எடுத்துவிட்டால் உங்களுக்கு 99000 மட்டுமே தரப்படும். ஆனால், இந்த  3.5 வருடத்தில் வட்டி மூலம் 43275 வருவாய் வந்து இருக்கும்.
மற்ற திட்டங்களுடன் ஒரு ஒப்பீடு கீழே,



நிலையான வைப்பு நிதியை(FD) விட அதிக வட்டியை இத்திட்டம் தருகிறது. அதே போல பிரதம மந்திரி வயோதிக வருவாய் திட்டத்தை விடவும் அதிக வட்டி கிடைக்கிறது. தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) அதிக லாபம் கொடுத்தாலும், அதில் இருந்து பாதியில் வெளியேற முடியாது. மேலும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டியும் கிடைக்காது.

மொத்தத்தில், எனக்கும் முதலீட்டுப் பணம் அவசரமாக தேவைப்படாது. 10 வருடம் இருந்தாலும் 8% வட்டி உத்திரவாதம் எதிர்ப்பார்ப்பவர்கள், பிமவவ(பிரதம மந்திரி வயோதிக வருவாய்) திட்டத்தில் முதலீடு செய்யலாம். மற்றவர்களுக்கு மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் தான் சிறந்த திட்டமாக இருக்கும் என்பது கருத்து. முதலீடு செய்பவர்கள் தங்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம்.  




No comments:

Post a Comment