Categories

Tuesday, 22 January 2013

வாசிப்பு ஒரு சுய ஆராய்ச்சி


மனித மூளைக்குள் ஒரு நொடிக்குள் மின்சாரத்தை விட வேகமாக பாயும் நினைவலைகளில் தோன்றிய வேதியியல் ஆராய்ச்சியின் முடிவா? கழிவா? என புரியாத குழப்பத்தில் இப்பதிவை உடனே எழுத ஆரம்பித்துவிட்டேன்.





 "செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம்.." என்ற பொய்யாமொழிப் புலவனின் குறளை நான் கருவறையில் இருக்கும் பொழுதே என் தாய் சத்தமாக உரைத்து இருப்பார்களோ என எண்ணும் அளவிற்கு எனக்கும் வாசிப்பிற்கும் தூரம்.

எனது ஆரம்ப பள்ளி காலங்களில் படிப்பு சுமை என்ற கிரகணம் என்னை அதிகம் கவ்வாத(20 வருஷம் முன்னாடி அப்படிதான்) காலகட்டத்தில்,  என் காதுகளை என் பாட்டியின் மற்றும் அம்மாவின் கதைகளுக்கும், புரளிகளுக்கும் கடன் கொடுத்து இருந்தேன்.

எனது வாழ்வில் கல்வி என்ற பகுதி தீவிரம் அடைந்த பொழுது, இயந்திரங்களுக்கு நடுவில் மாட்டி வேறு ஒரு இயந்திரமாய் வெளி வரும் இரும்பு பட்டறை(தொழிற்சாலை) போலவே பள்ளி எனக்கு தோன்றியது. அங்கு மதிப்பெண் எடுப்பதே தலையாய கடமை என எண்ணி அனைவருடனும் சேர்ந்து ஓடிக் கொண்டு இருந்தேன். அதை ஒரு அறிவுக்கூடமாக பார்க்கவே தோன்றவில்லை. நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தேவையான அடிப்படை காரணியாகவே கல்வி எனக்கு தோன்றியது. அங்கு நன்கு மனனம் செய்ய கற்றுக்கொண்டேன்  என்பதை தவிர என் மூளைக்குள் சென்ற ஒரே விஷயம் தமிழ் தானோ என தோன்றுகிறது. புத்தகத்தில் இருப்பதை அப்படியே கூறும் ஆசிரியருக்கு என் செவி சாயவில்லை. எனக்கு தாய்மொழியாய் பழக்கமான தமிழை செய்யுள் வடிவில் கூறி, பின் உரைநடையில் விளக்க மெனக்கெடுவதால் தமிழில்(பாடம்) கூறியவை மட்டும் என் மூளைக்குள் அதிகம் புகுந்ததோ என தோன்றுகிறது. எனவே இங்கு வாசிக்கும் ஆர்வம் கூடியதாக என்னால் ஏற்க முடியவில்லை.

என் பதின்ம வயதின் ஆரம்பத்தில் எனக்கு கிரிக்கெட் மற்றும் தெரு விளையாட்டுகளில் இருந்த ஆர்வம் வாசிப்பில் இல்லை. சும்மா இருக்கும் நேரங்களில் வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதிலும், வானொலி கேட்பதிலும் பொழுது போய்விடும்.

இதையெல்லாம் மீறி என் வாசிப்பை சிறிதளவேணும் அதிகரித்தவை , சிறுவர் மலரும், கிரிக்கெட் செய்திகளும், என் பாட்டிக்காக நான் வாசிக்கும் நாளிதழும் தான்.

என் அப்பாவின் அலுவலக நூலகத்தில் ஆண்டு விடுமுறையின்போது எடுத்து வந்த விக்ரமாதித்தன் கதைகள், ஒரு தமிழ் காமிக்(பெயர் ஞாபகம் இல்லை), ராஜேஷ்குமாரின் க்ரைம் போன்றவை என் வாசிப்பை சிறிது வளர்த்தன. 'அப்பா அடுத்த புக் எடுத்துட்டு வாங்கப்பா' என்ற கேட்டது ஞாபகம் உள்ளது. ஆனால், எல்லோரும் விடுமுறையில் நூலகத்தை பயன்படுத்தியது என் ஆர்வத்திற்கு முட்டுகட்டையாய் போய்விட்டது.

கல்லூரியில் படிக்கும் பொழுது வாங்கிய கணினியை ஆராயந்தே காலம் ஓடிவிட்டது. கல்லூரி இறுதியில் வேலைக்கான வாழ்க்கையை பற்றிய பயத்தில் சுய முன்னேற்றத்தில் இறங்கிவிட்டேன். அதற்கும் செவி வழி அறிவுரை தான். புத்தகத்தை நாடவில்லை. ஒருவேளை அப்பொழுதே கணினியில் தமிழ் இப்பொழுது இருப்பது போல் எளிதாக கிடைத்து இருந்தால் நிறைய வாசித்து இருப்பேனோ!! என் கூட படித்த(அங்கில மோகம் பிடித்த) அதிமேதாவிகளும் கணிபொறி அல்லது ஆங்கில புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளவர்கள். நான் எதிர்திசையில் பயணிப்பவன்.

ஆங்கில நாளிதழோ,புத்தகமோ படிக்கும் ஆர்வம் இதுவரை வந்ததேயில்லை. இதுவரை ஒரு ஆங்கில புத்தகம் கூட படித்ததில்லை. முயற்சி செய்ததும் இல்லை. வாசிப்பின் அழகே நம்மை அப்படியே அதற்குள் பயணிக்கவைப்பதில் தான். என்னதான் தகவல் தொழில்நுட்ப துறையில் நாள் முழுதும் ஆங்கிலம் பேசி வேலை செய்தாலும், ஒரு புத்தகத்தை அகராதியின் உதவி இல்லாமல் படிக்குமளவு எனக்கு ஆங்கில ஆளுமை இல்லை. அப்படி அடிக்கடி அகராதியை நாடினால் வாசிப்பின் சுவாரஸ்யம் குறைந்துவிடும்  என்ற எண்ணமும் உள்ளது. மொத்தத்தில், முன்பின் அறியா மனிதர் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் குழந்தையிடம்  தோன்றும் அறுவருப்பு போன்றது என் ஆங்கில வாசிப்பின் உணர்வு.

இவை எல்லாம் தாண்டி என் வாசிப்பை தடுத்து நிறுத்தியது என் சோம்பேறித்தனம் தான் என்று தோன்றுகிறது. என் தேடல் இல்லா குணம் தான் என் வாசிப்பை வெகுவாக பாதித்துவிட்டதோ எனவும் தோன்றுகிறது.

வாசிப்பு இல்லாமல் போனதற்காக என்னை அசூசை கொள்ளச் செய்தது என் தம்பி பிரபு தான். அவன் தான் எனக்கு கீச்சகத்தை(ட்விட்டரை) அறிமுகம் செய்து வைத்தான்.

இப்படி வாசிப்பு இல்லாமல் இருந்த என்னை கீச்சகம்(ட்விட்டர்) மாற்றிவிட்டது. நான் தேடி போகாமலே என் சந்தில்(TL) சாளரம்(ப்ளாக்) மற்றும் மின் புத்தககங்களின் சுட்டியை(லிங்கை) கொண்டு வந்து கொட்டியது. அவை அனைத்தையும் படிக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். சாளரங்களை பொதுவாக ஓரிரு நாளில் படித்துவிடுறேன். புத்தகங்களுக்கு தனியாக திட்டமிட வேண்டியுள்ளது. இது வரை பொன்னியின்செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு படித்து இருக்கிறேன். இனி எல்லா புத்தகமும் படிக்கும் எண்ணமும் உள்ளது.

எனது வாசிப்பு அனுபவத்தில்(சரி..இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கேன்..ஒத்துகிறேன் :) ),   புத்தகத்திற்கு வயது என்பதே இல்லை என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. என் ரசிப்பை உயர்த்துகிறது. என் தனிமைக்கு சிறந்த வடிகாலாய் உள்ளது.

இந்த தலைமுறையை சேர்ந்த என் போன்ற சோம்பேறிகளுக்கே வாசிப்பின் பலனை உணர இத்தனை வருடம் பிடித்திருக்கிறது என்றால், கூகுளில் தேடி ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் அப்படி ஒரு விஷயம் உலகில் இல்லையோ என யோசிக்கும் அளவு தேடல் இல்லா சோம்பேறி ஆகி கொண்டு இருக்கும் அடுத்த தலைமுறைக்கு, வாசிப்பு என்பது உயிர் போகும் தருணத்தில் தேவையான அளவு முகமூடி வழி செல்லும் உயிர்வளி காற்று போல இருக்குமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

அவ்வளவாக வாசிப்பு இல்லாமலே பதிவு எழுதுவதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது :) என் தம்பி பிரபு சொன்னான் "பதிவு மட்டும் எழுதிவிட்டு மற்றவர் எழுத்துக்களை படிக்காமல் இருப்பது வாசிப்புக்கு செய்யும் துரோகம்". வாசிக்க ஆரம்பித்துவிட்டதாலும், இனி தொடர்ந்து வாசிக்கும் ஆர்வமும் நம்பிக்கையும் இருப்பதாலும், பதிவு எழுத கூச்சம் வரவில்லை... :)

3 comments:

  1. படிப்பு சுமை என்ற கிரகணம் என்னை அதிகம் கவ்வாத(20 வருஷம் முன்னாடி அப்படிதான்) காலகட்டத்தில், என் காதுகளை என் பாட்டியின் மற்றும் அம்மாவின் கதைகளுக்கும், புரளிகளுக்கும் கடன் கொடுத்து இருந்தேன். .// haha
    இதையெல்லாம் மீறி என் வாசிப்பை சிறிதளவேணும் அதிகரித்தவை , சிறுவர் மலரும், // thooooooo

    ஒரு புத்தகத்தை அகராதியின் உதவி இல்லாமல் படிக்குமளவு எனக்கு ஆங்கில ஆளுமை இல்லை.// same pinch

    முன்பின் அறியா மனிதர் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் குழந்தையிடம் தோன்றும் அறுவருப்பு போன்றது என் ஆங்கில வாசிப்பின் உணர்வு. // semma sakthi :)

    இது வரை பொன்னியின்செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு படித்து இருக்கிறேன். இனி எல்லா புத்தகமும் படிக்கும் எண்ணமும் உள்ளது. // good

    ஆனால், எல்லோரும் விடுமுறையில் நூலகத்தை பயன்படுத்தியது என் ஆர்வத்திற்கு முட்டுகட்டையாய் போய்விட்டது.// nice

    கூகுளில் தேடி ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் அப்படி ஒரு விஷயம் உலகில் இல்லையோ என யோசிக்கும் அளவு தேடல் இல்லா சோம்பேறி ஆகி கொண்டு இருக்கும் அடுத்த தலைமுறைக்கு,// true..

    very nice post sakthi.. keep reading and writing.. :)) all the best..

    ReplyDelete
    Replies
    1. அட... நான் ட்விட்டர்ல போஸ்ட் பண்ணவே இல்ல.. அப்பவும் படிச்சுட்ட!!! இங்க பாலோ பண்றியா... ரொம்ப நன்றி :))

      Delete
    2. ஏதோ... சுய புராணம் எழுதுகிற உணர்வு.. அதான் ட்விட்டர்ல போடல... (எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.. :)) )

      Delete