Categories

Wednesday, 27 February 2013

பிரம்மச்சாரி

பிரம்மச்சாரி... இது ஒரு விசித்திரமானதொரு மக்கள் கூட்டம். இந்த பிரம்மச்சாரிகளை பற்றி பொதுவாக ஒரு பிம்பம் இருக்கிறது. நானும் பிரம்மச்சாரி தான்.

தரையில் தடுக்கி விழும் குழந்தை எழுந்து ஒரு சிறு கல்லை எடுத்து தரையின் மீது எறிந்து தன் கோவத்தை தீர்த்துக்கொள்ளும். குழந்தைக்கு, அந்த கல்லினால் பூமிக்கு வலி ஏற்பட்டதா என்ற கவலை எல்லாம் இல்லை. அது போல, பிரம்மச்சாரியின் பிம்பத்தின் மேல் கல் எறியும் முயற்சியே இது.

இந்த தலைப்பிற்குள் பெண்களும் வருவர் என்றாலும், அதில் எனக்கு அவ்வளவு பரிச்சியம் மற்றும் அனுபவம் இல்லை என்பதால் அதை பற்றி இங்கு பேசவில்லை. இதற்காக நான் ஆண் ஆதிக்கவாதி என பட்டம் கட்டி விடாதீர்கள்  :) 

உலகில் எத்தனையோ வகையால் மனிதன் பிரிவினைக்கு உட்பட்டாலும் அத்தனை பிரிவுகளிலும் இளைஞர் அல்லது பிரம்மச்சாரிகளின் மீதுள்ள பார்வை கிட்டத்தட்ட ஒரே மாதிரியே உள்ளது. அதாவது, பிரம்மச்சாரிகள் என்றாலே பிரச்சனை செய்யக் கூடியவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், கடின/கல் நெஞ்சக்காரர்கள், ஊர் சுற்றி பொழுது கழிப்பவர்கள். சரி இதெல்லாம் சொல்கிறவர்கள் என்ன நினைத்து சொல்கிறார்கள் என்று யோசித்து பார்த்தால், ஒரு வேளை சொல்கிறவருக்கு உண்மையில் எங்கள்(பிரம்மச்சாரி)  மீது அசூசையோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு திருமணமானவரை அழைத்து அவருடைய பிரம்மச்சரிய வாழ்க்கை பற்றி கேட்டு பாருங்கள், பல கதைகளுடன் சேர்ந்து ஒரு பெருமூச்சும் வரும். அதுவே, எனக்கு இந்த எண்ணத்தை கொடுத்தது. சரி, பிரம்மச்சாரிகளையும் இரு வகையாக இங்கே பிரித்துக் கொள்ளலாம். வீட்லேயே இருக்கும் பிரம்மச்சாரிகள், வெளியில் தங்கி வாழும் பிரம்மச்சாரிகள். இதில், ஒப்பிட்டு பார்த்தால் வெளியில் தங்கி வாழும் பிரம்மச்சாரிகளுக்கே அதிக பிரச்சனைகள். 

சரி. விஷயத்துக்கு வருவோம். பிரம்மச்சாரி என்பவன் என்னை பொறுத்தவரை பதின்ம வயது இறுதி தொடங்கி, முப்பது வயது வரை உள்ளவர்களே. அதற்கு மேலும், பிரம்மச்சாரிகளாக இருப்பவர்களுக்கு வாழ்க்கை முறையும், பிரச்சனைகளும் வித்தியாசமானவை. "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள் மன்னர் காலம் முதல் இன்று வரை திரவியம் தேடி திரை கடலில் உள்ள அலைகளை விட அதிகமான பிரம்மச்சாரிகள் கிளம்பி இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இங்கு பொதுவாக ஆண் என்பவன் அழுகைக்கு அப்பாற்ப்பட்டே வளர்க்கப்படுகிறான். அழுதாலும் கூட சிறு வயதிலேயே, "ஆம்பிளை பையன் என்னடா அசிங்கமா அழுதுட்டு?" என்று அவன் அன்னையும் கூட சொல்ல அழுகையை அடக்கியே பழக்கப்படுகிறான். அப்படி வளர்க்கப்படும் ஒருவன் பிற்காலத்தில் குடும்பம் விட்டு பிரிந்து வாழ்கையில், கல் நெஞ்சக்காரன் என்ற பெயர் பெறுகிறான். அந்த பெயரையும் அவனே விரும்பி ஏற்கிறான். அவ்வாறே காட்டி கொள்கிறான். ஒரு வேளை, அவன் தன்னை தானே மென்மையானவன் என எண்ணத் தொடங்கினால் வீட்டை பிரிந்து இருப்பது ஒரு அசாத்தியமான செயலாகிவிடும், பிறகு தன் தாய்  மடிக்கும், மற்ற உறவுகளின் பாசத்திற்கும் வெளிப்படையாக ஏங்க ஆரம்பித்துவிடுவான். நடுத்தர/ஏழை வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கே பொறுப்பும், இந்த பிரிவும் பொதுவாக அமைகிறது.  கூடவே , தங்கையோ அக்காவோ இருந்தால் நம் நாட்டில் அவனுக்கான பொறுப்புகள் இன்னும் அதிகம். பதின்ம வயது இறுதியில் தான் பொதுவாக ஒரு இளைஞன் தன் குடும்பம் விட்டு நல்ல கல்விக்காகவோ அல்லது வேலைக்காகவோ வெளியேறுகிறான். அவ்வாறு வெளியேறி பையை தோளில் மாட்டி நகரும் போது தான் அவனுடைய பசு மரத்தில் முதல் ஆணி அடிக்கப்படுகிறது. அந்த கணத்தில், இந்த பிரிவு உண்மையில் தேவை தானா என தெருமுனையில் தன் வீட்டின் உருவம் மறையும் பொழுது, ஒரு முறை யோசிக்க தான் தோன்றும்.

அதன் பின், அதே மரத்தில் பல ஆணிகள் ஏறி அதற்குரிய வலியே மறந்துவிடும். இது போன்று பிரிந்து வருகிற பிரம்மச்சாரிகளுக்கு நண்பர்களே பெரிய ஊன்றுகோல். அவர்களை விட்டு அகலவே மாட்டார்கள். பல இடங்கள் சேர்ந்து சுத்துவார்கள். அதற்காக ஊதாரிகள் கிடையாது. ஒரே அறையில்/ஊரில் இருந்தாலும் சலிப்பு ஏற்பட்டுவிடும். சலிப்பு ஏற்பட்டால் தனிமை பிடித்து ஆட்டிவிடும். அந்த சலிப்பு தான் உங்களை தவறான பாதைக்கு கூட்டி செல்லும். அந்த சலிப்பு தான் சோம்பேறித்தனம், ஒழுக்கமின்மை போன்ற குணங்களின் வித்து. புதுப்பேட்டை படத்தில் முதல் காட்சியில் தனுஷ், ஒரு மிரட்சியுடன்  "யாராவது இருக்கீங்களா?" என்று கேட்பார். சலிப்பும், தனிமையும் பிடிக்கும் பிரம்மச்சாரி மனதின் சராசரி கேள்வி அது. 

ஒரு பிரம்மச்சாரிக்கு வீடு கிடைப்பதில் இருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது. யாரும் வீடு தர முன்வர மாட்டார்கள். வேடிக்கையாக கேள்விப்பட்ட ஒன்று நினைவிற்கு வருகிறது. "கல்யாணம் ஆனவனுக்கு தான் வீடு குடுப்பாங்களாம், பின்ன ஏன் உங்க பொண்ணை ஒரு பிரம்மச்சாரிக்கு கட்டிக்கொடுக்குறீங்க?". வீடு தரமாட்டேன் என்று சொல்பவர்களும் பிரம்மச்சாரியாக இருந்து வந்தவர்கள் தானே!! வரதட்சணை எதிராக எண்ணம் உடைய ஒரு பெண், மாமியார் ஆனதும் வரதட்சணை தவறில்லை என்பது போல தான் இங்கே வீடு தரமாட்டேன் என்பவரது மனநிலையும் கூட. இவர்கள் தங்கள் வீட்டில் உள்ள ஒரு இளைஞன் வெளியூர் சென்று வீடு கிடைக்கவில்லை என்றாலும், இதையே தான் சொல்லுவார்களா? 
நன்றாக உங்கள் வீட்டிலும், அண்டை வீடுகளிலும் உற்று பாருங்கள், ஒரு குடும்பம் அதிக மகோத்துவம் அடைவது பெரும்பாலும் அவ்வீட்டிலுள்ள பிரம்மச்சாரி வேலைக்கு போகும் புதிதில் தான். தேவர் மகன் சிவாஜி போல் சொன்னால் "இந்த காட்டுமிராண்டி பய கூட்டத்துல உங்க அப்பனும் ஒருத்தன் தான்ங்கிறதை மறந்துடாதீங்கப்பு..."

இவ்வளவு சொல்கிறாயே.. பிரம்மச்சாரிகள் எல்லோரும் என்ன நல்லவர்களா எனக் கேட்கலாம். இல்லை தான். இங்கு யார் தான் நல்லவர்கள்? சரி நல்லவர்கள், கெட்டவர்கள் என எதை வைத்து தரம் பிரிக்கிறார்கள்?  ஆளவந்தான் கமல் போல் இங்கே எல்லாருமே "கடவுள் பாதி மிருகம் பாதி" தான். என் நட்பு வட்டாரத்தில் ஒரு சொல் உண்டு. "நல்லவர்கள், கெட்டவர்கள் என இங்கே யாருமே இல்லை, சந்தர்ப்பம் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் ரெண்டு வகை. கிடைத்தும் தவறு செய்யாதவனே நல்லவன்". அது படி பார்த்தால், பிரம்மச்சாரிகளுக்கு எத்தனை வாய்ப்புகள்.. உரிமையுடன் கேள்வி கேட்க ஆளில்லை கூடவே கட்டற்ற சுதந்திரம், கெட்டு போவதற்காக தனியாக மெனக்கெட தேவை இல்லை நண்பர்களே உதவுவார்கள். இருந்தும் எத்துணை சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். சரி. அதில் வழி தவறியவர்களும் உள்ளனர். அதாவது, புகை,மது, மாது போன்ற பழக்கத்துக்கும் அடிமையானவர்கள் உண்டு. ஆனால், இங்கு இன்னொரு விசயமும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதாலே, அவர்களை கெட்டவர்கள் என கூற இயலாது. என்னை பொறுத்தவரை,அவர்களால் அடுத்தவர்களுக்கு துன்பம் நேராதவரை அவர்கள் நல்லவர்களே. அப்படி பார்த்தால், காந்தி கூட ஒரு காலத்தில் இப்படி இருந்தவர் தானே. மேலும் அவர்கள் இருக்கும் வயது அப்படி, எதையும் உடனே எளிதில் மாற்றியமைக்கலாம், சரி செய்துவிடலாம் என நினைக்கக்கூடிய அசாதாரண நம்பிக்கையும், தேக பலமும் உள்ள பருவம். அது தான் அவர்களின் பலம் மற்றும் பலவீனமே. இதை நன்கு அறிந்ததனாலே தான் விவேகானந்தரே "100 இளைஞர்களை கொடுங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்" என்று சொன்னார். அவர் 100 திருமணமானவர்களையோ, இல்லை பொறுப்பான பெரியோர்களையோ கேட்டு இருக்கலாமே? 

பிரம்மச்சாரி என்ற சொல்லுக்கு உண்மையில் என்ன விளக்கம் என எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை அவர்கள் பிரம்மனால் அனுப்பப்பட்ட ஆசாரிகள். அவர்கள் தன்னையும் செதுக்கி, தன் குடும்பத்தையும் செதுக்கி, தன்னை சுற்றியுள்ள சுற்றம்,ஊர், நாடு என அனைத்தையும் செதுக்க வல்லவர்கள். எனவே, இப்படிப்பட்ட ஒரு அற்புத இனத்தை ஈன பார்வை பார்ப்பதை இனியேனும் நிறுத்துங்கள்.

இதிலே, நான் அனுபவம் இல்லாமல் ஏதாவது பேசியது தப்பாக தோன்றினால், வடிவேலு சொல்ற மாதிரி "என்னைய உங்க வீட்டு பிள்ளையாய் நினைச்சு மன்னிச்சு விட்ருங்க.." :-))       

-நன்றி
ச.சக்திவேல்

14 comments:

  1. ரொம்ப அனுபவப் பட்டிருப்பீங்க போல... நல்லாருக்கு...

    ReplyDelete
    Replies
    1. பெரிய அனுபவம் எல்லாம் இல்லைங்க.. ஆனா, நிறைய பாத்து இருக்கேன்.. :) நன்றி :)

      Delete
  2. பிரம்மச்சரியம் ...உங்கள் ஆதங்கம் புரிகிறது....இந்த எழுத்துக்கள் உங்களையும் உங்கள் குண நலன்களையும் வைத்து பின்னப்பட்டவை ...அதனால் இதில் உங்கள் கருத்துகள் உங்கள் நியாங்கள் ஆகிறது...இது பொதுவாக எடுத்துக்கொள்ளதக்க கருத்து ஆகாது நண்பரே...பிரம்மச்சாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் இளம் சமுகம் அவர்களுக்கு குடி கொடுத்த புண்ணியவான்களுக்கு உண்மையானவர்களாக இல்லாமல் எப்போதும் குடியுடன் கும்மாளத்துடனும் ஒரு சின்ன டாஸ்மாக் போல தங்கள் வீடுகளை நடத்துவது இன்றைய நடைமுறை உண்மை ...அவர்கள் குடி உள்ள வீடுகளுக்கு சுற்றி உள்ள தோழிகள் ...பாவம் கண் காட்சி பொருள்கள் ...மறுக்காதீர் நண்பரே ...புகை பிடிப்பது எப்படி என்று வீட்டின் வெளியே வந்து நின்று சிறு குழந்தைகளும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் சொல்லித்தர வல்லவர்கள் நம் இளைய தோழர்கள் என்பது என் தாழ்மையான கருத்து நண்பரே...புகை, மது, மாது இந்த போதைகளுக்கு நீங்கள் சொல்லும் பிரம்மச்சாரி என்று அடிமையாகாமல் இருக்கிறானோ அன்று விடியும் இந்த சமுதாயம் தோழரே....நன்றி ...

    சுந்தரம்@sundarsuraj

    ReplyDelete
    Replies
    1. பாத்தீங்களா... எவ்வளவு விஷயம் பேசி இருக்கேன். ஆனா, உங்களுக்கு எது கண்ணுல படுது? சரி. பதிலுக்கு முன்னாடி என்னை பத்தி சொல்லிகிறேன். எனக்கு இந்த பழக்கங்கள் கிடையாது. அதை நான் ஆதரிப்பதும் இல்லை. நான் இதற்காக யாருக்கும் காசு கொடுத்தும் இல்லை. நண்பர்கள் வற்புறுத்தி கேட்டால் கூட ட்ரீட் வைக்கும் பொழுது போதை வஸ்துகளை உள்ளே விடுவதும் இல்லை. நன்றாக பாருங்கள்.. அதை "தீய" பழக்கமாக தான் நான் சொல்லி இருக்கிறேன்.

      //என்னை பொறுத்தவரை,அவர்களால் அடுத்தவர்களுக்கு துன்பம் நேராதவரை// என்றும் சொல்லி இருக்கிறேன். மேலும், இவர்கள் தீயவை எனத் தெரிந்தே தான் செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பாதிக்காத வரை யாரும் மாற தயாராக இல்லை.

      வீடு கொடுத்தவர்களும் சேர்ந்து குடித்தும் பார்த்து இருக்கிறேன். எனக்கு புள்ளிவிவரம் எல்லாம் தெரியாது. வீடுகளில் ஒழித்து குடிக்கும் அப்பாக்களும் தான் தன் பிள்ளைகளை அதிகம் கெடுக்கிறார்கள். மேலும் இதெல்லாம் சட்டம் மூலம் ஒடுக்க வேண்டியவை. நீங்கள் சொல்லும் எல்லாம் உண்மை என்றாலும்,இந்த சமுதாயத்தில் அனைத்து தரப்பிலும் உள்ள அனேக பேர் இதை செய்கின்றனர். பிரம்மச்சாரிகளை மட்டும் குறை கூற வேண்டிய அவசியமில்லை.மேலும் எல்லா பிரம்மச்சாரிகளையும் ஒரே கண் கொண்டு பார்ப்பதை தான், நான் இங்கு சுட்டி காட்ட விழைகிறேன். அந்த பார்வையால் என் போன்றவர்களும் பாதிக்கப்படுவர். நன்றி :-)

      Delete
  3. சக்தி நான் என் பதில் ஆரம்பிக்கும் முன்னரே "இந்த எழுத்துக்கள் உங்களையும் உங்கள் குண நலன்களையும் வைத்து பின்னப்பட்டவை" அப்படி சொல்லிட்டுதான் ஆரம்பிச்சிருக்கேன் ...நான் பிரம்மச்சாரிகளை பற்றி சாடிய கருத்துக்கள் உங்களுக்கு பொருந்தாதுன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்....ஒரு வகுப்புல இருக்கற 40 பசங்கள்ல 5 பேர் நல்லா படிச்சா அதுல நீங்க ஒருத்தர் அவ்வளவுதான் ...மிச்சம் 35 பேர் பண்ற சேட்டைகளை அந்த 5 பேர் பொறுப்பு ஏத்துக்கவும் முடியாது அதே சமயத்துல நியாயப்படுத்தவும் முடியாது....35 பேர் பண்ற விஷமத்தால அந்த 5 பேர் பாதிக்கப்பட மாட்டாங்க ...ஆசிரியருக்கு தெரியும் யார் நல்ல மாணவன் அப்படின்னு....அதனால உங்கள போன்ற நல்ல பிரம்மச்சரியம் கடைபிடிக்கரவங்கள பாகுபடித்தி,உயர்த்தி பாக்கற மனப்பாங்கு நிறையவே இருக்கு மக்களுக்கு ...ஒரு கூட்டத்த திருத்தனுன்னா அந்த கூட்டத்துல ஒருத்தனா இருக்கரவராலதன் முடியும் ....அதனால உங்களுக்கு அந்த திருத்தற பொறுப்பு நிறையவே இருக்குன்னு சொல்றதுல நான் கொஞ்சம் உங்ககிட்ட உரிமை எடுத்துக்கறேன் சக்தி ...

    ReplyDelete
    Replies
    1. நண்பா..புரியுது. நானும் முயற்சி பண்ணி இருக்கேன். ஆனா இது யார் அட்வைஸ் பண்ணாலும்.. ஸ்ப்ப்ப்ப்பான்னு சொல்ற வயசு.. அது நண்பனா இருந்தாலும்.. ஏன் நானும் கூட அப்படி தான். அதனால, என்னோட ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டது நண்பா :)) முன்னாடியே சொன்ன மாதிரி, அவங்க பண்ற காரியத்தோட விளைவு நல்லா தெரிஞ்சு தான் பண்றாங்க.. அதனால பெருசா ஒன்னும் பண்ணுறதுக்கு இல்லை. நன்றி.. :)

      Delete
  4. // என்னை பொறுத்தவரை அவர்கள் பிரம்மனால் அனுப்பப்பட்ட ஆசாரிகள். அவர்கள் தன்னையும் செதுக்கி, தன் குடும்பத்தையும் செதுக்கி, தன்னை சுற்றியுள்ள சுற்றம்,ஊர், நாடு என அனைத்தையும் செதுக்க வல்லவர்கள். //
    உண்மை அண்ணா! நல்ல பதிவு

    @iammeeru

    ReplyDelete
  5. எனக்கும் மீறு வின் கருத்துதான் ... நான் சொல்ல நெனத்ததை அவங்க சொல்லிட்டாங்க ...இன்று உலகம் முழுக்க பேசபடுற விவேகானந்தர் ஒரு பிரம்மச்சாரி தான்..பிரம்மச்சாரிகள் கையிலேதான் நாளைய உலகம்..அனா கூட அவங்களே புரிஞ்சுக்காம அவங்க மனதைத சில சமயம் காய படுத்தி வேடிக்கை பார்ப்பது ஏனனு தெரியலே ..அவங்கலும் ஒருநாள் பிரம்மச்சாரிகளை இருந்தவர்கள் தானே ..ரொம்ப அருமையான கருத்து...!!

    ReplyDelete
    Replies
    1. மீறு போட்டதே என் பதிவுல இருந்த கருத்து தான? ஏன் குழப்புறீங்க? :)) நன்றி.. படித்து கருத்து போட்டதற்கு.. :)

      Delete
  6. ஆமாம் உங்க கருத்துதான் ..Nice one ...!!!

    ReplyDelete