Categories

Tuesday 2 July 2013

மனித இனம், பல கேள்விகள்...

வெடித்துச் சிதறியதாய் சொல்லப்படும் இந்த அண்ட வெளியில் இருக்கும் பல விண்மீன் திரள்களின் ஊடே பால் வீதி திரளின் ஏதோ ஒரு மூலையில், சூரிய குடும்பத்தில், சூரியனை அச்சாக கொண்டு ஏதோ ஒரு ஈர்ப்பு விசை காரணமாக செக்கு இழுக்கும் மாடு போல, சுற்றி வரும் 8 கோள்கள் மத்தியில் ஒரு கோளான பூமியில் உள்ள பல கோடி உயிர்களுக்கு இடையில் கண்டம்,நாடு,மாநிலம்,இனம்,மொழி,மதம்,ஜாதி இன்னும் பல கூறுகளாய் பிரிக்கப்பட்ட ஒற்றை மனிதனின் ஆதி தேடல் என்னவாக இருந்திருக்கும்??






ஒத்துக் கொள்கிறேன். இதை எழுத/ஆராய நிறைய பேர் இருந்தார்கள்,இருக்கிறார்கள்,இருப்பார்கள். என்னளவில் எனக்கு தோன்றுவதைக் கிறுக்க சுதந்திரம் இருப்பதால் இங்கே அதை பதிவு செய்கிறேன்...

ஒரு குழி அல்லது பாதையை உருவாக்கும் பொழுது, ஒரு கட்டத்துக்கு மேல் திரும்பிப் பார்த்து, நாம் இது வரை உருவாக்கியது சரியா? நாம் நினைத்ததை தான் செய்கிறோமா என சரி பார்த்துக் கொள்வது போல் இந்த பதிவை கொள்ளலாமா?

முதன்முதலில் தோன்றிய மனிதன் எதைத் தேடி அல்லது நோக்கி யோசித்து நகர்ந்தான்? மற்ற 5 அறிவு உயிர்கள் போல், தன்னை காத்து வாழத் தான் தொடங்கி இருப்பான். ஆனால், ஒரு அளவுக்கு மேல் கலாச்சாரம்,நாகரிகம் எல்லாம் பெற்ற பின்னர், அவன் குறிக்கோள் எதை நோக்கி இருந்திருக்கும்? அப்படி அவன் நினைத்ததை அடைய அவன் வாழும் 100(சராசரி) வருடம் போதாது என்பதால் தான், கற்ற விஷயங்களை தகவல் பரிமாற்றம் செய்யத் தான் மொழிக்கு முழு வடிவம் கொடுத்தானா? இன்று வரை மொழி பாதுக்காக்க போராடுவதில் இந்த காரணமும் இருக்குமா? பழைய கல்வெட்டு அல்லது அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் அவனது நோக்கத்தை தேடுகிறார்களா? இந்த செயல் எல்லாம் எதைப் பாதுக்காக்க செய்யப்படுகிறது? அவன் எதிர்ப்பார்த்த நோக்கத்தில் தான் நாம் சென்றுக் கொண்டிருக்கிறோமா? இதற்குள் விஞ்ஞானம்,மெய் ஞானம் என்பது எல்லாம் என்ன? விதிகள்,கோட்பாடுகள்,மதங்கள் எல்லாம் எதற்காக உருவாக்கப்பட்டிருக்கும்?

ஒரு தலைவன் தன் வாழ் நாளில் சமுதாயத்தில் செய்த மாற்றங்களை மிகப் பெரிய வெற்றியாய் கொண்டாடுகிறோமே. உண்மையில், அவன் தேர்ந்து எடுத்த பாதை சரியா? தவறாக கூட இருக்கலாம் அல்லவா? அவன் இறக்கும் பொழுது, அவன் அது வரை செய்த பரிசோதனை வெற்றியா? தோல்வியா? எனக் குறிப்பு விடுகிறானா? உண்மையில் நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் அந்த 'வெற்றி' உண்மையில் தோல்வியாகக் கூட இருக்கலாம் அல்லவா? அல்லது அரைகுறை எச்சமாய் கூட இருக்கலாம் அல்லவா? நமக்கு சாதகமாய் இருப்பதால் அதை வெற்றி எனக் குறிக்கலாமா? உதாரணத்துக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த சாதனைகள் எல்லாம் மனித இனத்துக்கு வெற்றியா? தோல்வியா?

மனிதன் உருவாகும் வரை இயற்கை, சூழல் மண்டலத்தை(eco system) தன் கட்டுக்குள் தான் வைத்து இருந்தது. உயிர்களின் சமநிலையை தானே தான் நிர்மானித்து வந்தது. முதன்முதலில் இயற்கை உருவாக்கியதை தானாக மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்ற இனம் மனித இனம். அதே போல், இது வரை எந்த எல்லையும் இல்லாமல் பெருகிக் கொண்டு வரும் ஒரே இனமும் மனித இனம் தான். ஆனால், அத்தகைய ஆற்றல் வைத்து என்ன சாதனை செய்து விட்டோம்? மற்ற 5 அறிவு உயிர்கள் முயற்சி செய்யும், அழியாமல் தொடர்ந்து வாழ்தல் என்ற முயற்சி தானே நாமும் செய்கிறோம். அதில் வெற்றி பெற்று கொண்டே தான் இருக்கிறோம். மருத்துவம் மூலம் ஆயுளை நீடித்துக் கொள்கிறோம். பாதுகாப்பு கருவி/முறைகள் மூலம் மற்ற உயிர்களிடம் இருந்தும் காத்துக் கொள்கிறோம். இப்பொழுது நமது வசதிக்கு ஏற்ப இயற்கையை மாற்றியமைத்துக் கொண்டே போகிறோம். இப்பொழுது, நம் குறிக்கோள் தொடர்ந்து வாழ்தல் மட்டும் அல்ல, வசதியுடன் வாழ்தலும் தான். இதில், இயற்கை சமநிலையை மறந்து விடுகிறோமா? இது போல் நாம் ஒரு கட்டுக்குள் இல்லாமல் மனிதத் தொகை பெருகிக் கொண்டே போவதை தடுக்கத் தான் அனைத்து ஞானிகளும் துறவறம், பிரம்மச்சரியம் எல்லாம் கடைபிடிக்க வலியுறுத்தினார்களோ? அப்படியென்றால், மானுடம் அழிவதையோ/குறைவதையோ தான் விரும்பினார்களா? மெய் ஞானம் சொல்லுகின்ற தன்னை தான் அடக்கி ஆளுதல் என்பது இது தானா? அது தான் இந்த உலகம் நீடிக்க வழியா? அது புரியாமல் தான் இயற்கையின் சமநிலையை கெடுக்கிறோமா? இப்படியே போனால் என்ன ஆகும்? இயற்கை சீற்றம் வந்து உலக உயிர்கள் எல்லாம் அழியுமா? நாமும் அழிவோமா? இதற்கு முன்னால், லெமூரியா கண்டம் அழிந்ததாய் சொல்கிறார்களே.. அப்பொழுதும்
இது தான் நடந்து இருக்குமா? பழங்காலத்தில் என்றும் அழியாக் கல்வெட்டுகளில் பல தகவல்கள் எழுதி வைத்தே அது நமக்கு பயன்படவில்லையே, இப்பொழுது இருக்கும், நவீன கணினி வன்தட்டுகளில் (Hard disk) நாம் பதிவு செய்யும் அனைத்தும் உலகம் அழியும் போது, எப்படி அடுத்த தலைமுறைக்கு பயன்படும்? அதைப் பற்றி இது வரை யாரும் யோசிக்கவில்லையா? ஒரு வேளை, உலக உயிர்கள் இயற்கை சீற்றத்தில் அழியும் பொழுது, மனிதனுக்கு அழியும் எண்ணமே இல்லையோ? அதனால் தான், வேற்று கிரகத்தில் மனிதன் வாழும் சாத்தியம் தேடுகிறானோ? அப்படியென்றால், இந்த பூமி அழிவதை பற்றிக் கவலை இல்லையா? இயற்கை சமநிலையோடு வாழுதல் மனிதனுக்கு இயலாத காரியமா? நீர் ஓட்டத்தின் வேகத்தில் கலந்து செல்லும் மீன்கள் போல, இயற்கையோடு கலந்து மனிதனால் வாழ முடியாதா?

நிற்க. இன்னமும், மொத்த மனித இனமும் பாரதி சொல்லுவதைப் போல.."நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி, வேடிக்கை மனிதர்கள் போல்" தான் இருக்கிறோமோ? ஒரு குழந்தையை ஒரு அறையில் விட்டுவிட்டு கையில் பல வண்ண பொம்மைகள், புத்தகங்கள், மனிதர்கள், இசை எல்லாம் கொடுத்தாலும், சில சமயம் ஒரு மூலையில் ஊறும் எறும்பை குறிக்கோள் இல்லாமல் துரத்தும் ஆர்வம் வேறு எதிலும் இருக்காது? அது போலத் தான் ஓடிக் கொண்டு இருக்கிறோமா?  முதலில் இருந்தே தொடர்ந்து வாழ்தல் மட்டும் தான் நம் குறிக்கோளா? இந்த அண்ட வெளியை புரிந்துக் கொள்ள முயற்சி இல்லையா? அந்த வான் வெளி ஆராய்ச்சியும், நம் இனத்தை பெருக்கத் தானா? நம் மனித இனம் உருவானதன் அர்த்தம் என்ன? அதை அறிய முடியவில்லையா? உண்மையில், நம் உடலின் உறுப்புகள் மற்றும் மூளையின் ஆற்றல் பற்றிய முழுமையான புரிதல் இல்லையே நமக்கு.. முதலில் நாம் அதை அறிவது தான் நம் பிறப்பின் கேள்விகளுக்கு விடையாகுமா? அல்லது 6 அறிவுடன் நாம் பிறந்ததற்கு எந்த அர்த்தமும் இல்லையா?  

இன்னும் பல கேள்விகளுடன்...
-ச.சக்திவேல்

Img src: http://3.bp.blogspot.com/-AoWftIECv2E/UWFEopnOPiI/AAAAAAAAANU/5DpefGHa7Gs/s320/man-universe.jpg

14 comments:

  1. பதிவு மிகவும் அருமை..சிந்தக்க வைத்தது.. @amsa_krish

    ReplyDelete
  2. சக்தி, நான் என்னன்னு பின்னூட்டம் போடுவேன்? எதை எழுதினாலும் அபத்தமாய் இருக்குமோ என்றே பயம் வருகிறது..

    பூமியை சந்தேகமேயில்லாமல் ஓவர் எக்ஸ்ப்லாய்ட் தான் செய்துக்கொண்டிருக்கிறோம். இயற்கையின் விதிப்படி, எல்லா பொருட்களும் மண்ணில் மக்கும் படியாக அமைந்திருக்கிறது. அதை முதலில் உடைத்து மனிதன் ப்ளாஸ்டிக் கண்டுபிடித்ததிலிருந்து நம் அழிவை துவக்கியிருக்கிறோம். பூமி இன்னும் குறைந்தது 200 வருஷம் தாங்கும் என்று தீர்மானமாய் தெரிவதால், யாருக்கும் கவலையில்லை, பயமுமில்லை..

    நாம் ஒவ்வொருவரும் சின்ன சின்னதாய் செய்யக்கூடியது இருக்கிறது

    தண்ணீர், உணவு, மின்சாரம் இவற்றை வீண்டிக்காமல் இருப்பது.. கடைகளுக்கு பை கொண்டு போவது. Public transport பயன்படுத்துவது அல்லது car pooling. பக்கத்தில் போக, நடை

    எல்லாவற்றையும் விட, இவைகளை குழந்தைகளுக்கும் சொல்லித்தருவது.

    # ஒரு பதிவுல எல்லா கேள்விகளையும் கொட்டிடீங்க.. நான் ஒரு பத்து பின்னூட்டமாவது போடனும் போல இருக்கு :-)))

    ReplyDelete
    Replies
    1. அப்படி பார்த்தா இந்த மொத்த பதிவே ஒரு வகை அபத்தம் தான். சும்மாவா சொன்னாங்க. கேள்வி கேக்குறது ஈஸி... பதில் சொல்றது கஷ்டம்ன்னு... :-))) மனிதன் உருவாக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சில,வந்த வேலையை மறந்துட்டாங்களோன்னு என்பது தான் இது எல்லாக் கேள்வியும் அடக்கிய என்னோட ஒற்றை கேள்வியோ? #மறுபடியும் கேள்வி.. அவ்வ் :-))

      Delete
  3. சூப்பர் ;-)) தேடல் நிறைந்ததுதான் வாழ்க்கை

    ReplyDelete
  4. நல்ல பதிவு ....ரொம்ப யோசிக்கறீங்க!:)))) மடிந்தவரை "go green" பாலிசிகளை நாம் அனைவருமே சின்ன சின்ன விசயங்களிலாவது கடைபிடிக்க ஆரம்பிக்கலாம்.
    @shanthhi

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மேலேயா... நன்றி.. :-))

      Delete
  5. ரொம்ப சிறந்த ,சிந்திக்க வைக்கும் எழுத்து..விடை தெரியா கேள்விகள்..கிடைக்கும் என்று நமபுவோம் ....

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற கேள்விகளுக்கு பொதுவாக ஊகம் தான் பதிலா இருக்கும். நன்றி :-)

      Delete
  6. மீ எஸ்கேப்பு! இது எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.. :)

    ReplyDelete
    Replies
    1. வாசல் வரைக்கும் வந்துட்டு படிக்காம போற அளவுக்கா அவுட் ஆஃப் சிலபஸ்?? :-) நன்றி... :-)

      Delete
  7. சம்ப்ரதாயதுக்காக சொல்லவில்லை. என்னுள்ளும் எப்போதும் இது போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் ஓவ்வொரு தனி மனித வாழ்வின் அல்லது இருத்தலின் .நோக்கம என்னவாக இருக்கும்? தனி மனித உணர்வைத்தாண்டி இவ்வுலகமே உண்மையற்றதாய் தோன்றுகிறது. வெற்றி தோல்விகளும் அர்த்தமற்றவையே. முடிந்தவரை குழம்பி விடைகளறிய இயலா சிறுமையை ஒப்புக்கொண்டு வேலையை பார்க்கப்போவதே வழக்கமான வேலையாகிப் போகிறது.

    ReplyDelete
    Replies
    1. வழக்கமான வேலை இது தான் என வகுத்தலில் தான் குழப்பமே.. தனி மனித நோக்கத்தை விட, ஒட்டு மொத்தமாக மனித இனத்தின் நோக்கம் என்ன என்பதை தான் இங்கு கேட்க முற்பட்டேன்... அதை நோக்கி தான் ஒவ்வொரு தனி மனிதனும் முன்னேறுகிறானா? என்பதும் இதில் அடக்கம்... இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா? அது கிடைக்கும்போது நாம் இருப்போமா? போன்ற பல கேள்விகள் இன்னும் எச்சமாய்.. படித்ததற்கு நன்றி :-)

      Delete
  8. அன்புள்ள சக்திவேல்,

    இந்த கேள்விகள் வெவ்வேறு வடிவில் பலர் மனதில் இருந்து கொண்டிருந்தாலும், இதை எழுத்து வடிவில் கொண்டுவந்த விதத்தில் இந்தப் பதிவு என்னை மிகவும் ஈர்க்கிறது.

    ஆனால், பழங்காலத்து தகவல்கள் பயன்படவில்லை என்பதை விட பயன்படுத்தப்படவில்லை என்பதே என் எண்ணம்.

    "ஒப்புர ஒழுகு" என்று ஔவைக் கிழவி சொன்னதை ஒன்றாம் வகுப்போடு மறந்து விட்டோம்.

    "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல"

    எனும் வள்ளுவன் வரிகளை வாசித்து மகிழ்ந்ததோடு இருந்து விட்டோம். இவை எல்லாம் வெறும் அறிவுரைகள் அல்ல, இதை அவர்களின் வாழ்க்கையின் மூலம் நமக்கு விட்டுச் சென்ற அறநெறிகள் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விட்டோம். "My Life is my message" என்று சொன்ன காந்தியை ரூபாய் நோட்டுகளில் மட்டுமே மதிக்க கற்றுக்கொண்டதைப் போல.

    "அறம்" என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவசர கதியில் ஒரு வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டோம்.

    "சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை" என்பது நமது காலத்தவர்க்கே (என்னையும் சேர்த்து) மிகவும் பொருந்தக்கூடியதாக உள்ள சொற்றொடர்.

    நமது சுயத்தைக் கண்டடைவோம். சுய ஒழுக்கத்துடன் வாழ பழகுவோம். நமது வாரிசுகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இதே கேள்விகள் எழாமலிருக்க, நாம் வாழ மேற்கொண்ட அறநெறிகளையும் இயற்கையையும் (கொஞ்சம் கருணையுடன்) சேர்த்து வைக்கும் செல்வத்தைப் போல விட்டுச்செல்வோம்.

    உங்கள் சிந்தனை மேலும் மேலும் செழுமை அடைய வாழ்த்தும்...

    அன்பன்
    வைத்தியநாதன்.


    ReplyDelete