Categories

Monday 29 July 2013

பத்து வருடங்கள்

பி‌ஜி‌எம்ல எதுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாரோட 'லலலா... லலலா' போட்டுக்கோங்க தேவைப்படும்.

பத்து வருடங்கள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிடப்படும்படியான பெரும் பகுதி.



பத்து வருடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை எத்தனையோ விதமான மாற்றங்களை அடைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இளமை பருவத்தில் பத்து வருடம் என்பது உடல்,மனது,வாழ்க்கை என எல்லாவற்றிலும் மாற்றம் தரவல்லது. அத்தகைய சிறப்புமிக்க பத்து வருடத்தை பெற்றோர்,உறவினர் அருகில் இல்லாமலே நான் கழித்துவிட்டேன். ஆம். சரியாக இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு(29/7/2003) முன் தான் நான் பலவித கனவுகளுடனும், கேள்விகளுடனும் பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தேன். என் தந்தையின் ஆசைப்படி, நானே அடம்பிடித்து சேர்ந்த கல்லூரி தான். விடுதியில் என்னை சேர்த்துவிட்டு பெற்றோர் சென்ற பாதையை கனத்த இதயத்துடன் இரும்பு வேலிக்கு வெளியில் தலையை எட்டிப் பார்ததது இன்னும் அப்படியே மனதிலேயே இருக்கிறது. அதற்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக விடுமுறைக்கு மட்டுமே சொந்த வீட்டிலேயே விருந்தாளி போல போய் வந்து கொண்டிருக்கிறேன்.

என் வாழ்வின் இந்த பத்து வருடத்தையும் எந்த குறையும் இன்றி, தனிமையை உணராத விதம் உயிர்ப்புடன் வைத்து இருந்தது ஒரே ஒரு விஷயம் தான். அது நட்பு தான். என் வீட்டு மூத்தோர் நல்லது, கெட்டது பற்றி சொன்ன அடிப்படை கோட்டில் மீது நின்றுகொண்டு, என் நண்பர்கள் தோள் மீது கைப் போட்டு கொண்டு நடக்கத் தொடங்கினேன். வளர்கிற பிள்ளை என வீட்டில் எடுத்து கொடுத்த 'வானத்தை போல' சட்டைகளை அணிந்து கொண்டு, சமூகம், அரசியல்,அறிவியல், கலாச்சாரம், மொழி எது பற்றியும் புரியாமல் தான் இருந்தேன். நக்கல் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்து  தான் எல்லாத்தையும் பற்றி சிறிது தெரிந்து கொண்டோம். எந்த வேற்றுமையும் இன்றி பழகும் நண்பர்கள் மூலம் தான் பல வட்டார மொழி மற்றும் கலாசாரம் எல்லாம் கற்றுக் கொண்டேன். விடுதியில், இருந்த இருநூற்றி சொச்சம் மாணவர்களில் நான் பேசாதவர் என்று ஒருவர் இருந்திருப்பாரா எனத் தெரியவில்லை. எல்லோரிடமும் பேசுவேன். பிடிக்காதவர் எனப் பொதுவாய் யாருமில்லை. எனக்கு பிடிக்காத செயல் செய்யும் நண்பனிடம் ஒரு இடைவெளி பழகுவேனே தவிர பேசாமல் இருந்ததில்லை. என் நெருங்கிய நண்பர்கள் வட்டமே மிகப் பெரியது. நான் தவிக்கும் போதும், தவறி விழும் போதெல்லாம் என் நண்பர்கள் கைக் கொடுத்து இருக்கிறார்கள். கடந்த பத்து வருடத்தில் என்னுடன் வகுப்பறையும், தங்கும் அறையும் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு நண்பனும் எனக்கு குரு தான். என் ஆசிரியர்கள் கற்றுத் தந்தது வேலைக்கு ஆதாரம் என்றால், நண்பர்கள் சொல்லிக்கொடுத்தது என் வாழ்வாதாரம்.

இன்று நான் பேசும் வார்த்தை, என் நடை, என் உடை, என் ரசனை, என் அறிவு, எல்லாவற்றிலும் என் நண்பர்கள் கலந்து இருக்கிறார்கள்.என்னை ஒழுங்குப்படுத்தியவர்கள் அவர்கள் தான்.

இன்று காலையில் அலைப்பேசியில் அழைத்து "நம்ம நட்புக்கு இன்னையோட 10 வயசு மச்சி" என்று சொன்னதும் "அத்தனை வருஷம் ஆச்சாடா"ன்னு கேட்டான். உண்மை தான். இப்ப தான் இரவு பொழுது போகலைன்னு மலை உச்சிக்கு போய் மல்லாக்க படுத்துக்கிட்டு காலை வரை கதை பேசியதாய் ஞாபகம், அதுக்குள்ள 10 வருசம் ஆச்சு. இன்னொருத்தனுக்கு கூப்பிட்டா "உனக்கு எப்படி தேதி ஞாபகம் இருந்துச்சு"ன்னு கேட்டான். ஆமா, எனக்கு எப்படி சரியா மனசுல பதிந்தது? தெரியலை. கர்ணன்,துரியோதனன் என்றும் கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் என்றும் நம் சரித்திரத்தில் எப்படி நட்புக்கு தனி இடம் உண்டோ... அது போல என் வாழ்விலும் நட்புக்கு தனி இடம் உண்டு. இந்த வயதுக்கு நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ கிட்டதட்ட அந்த இடத்தில் இருக்கிறேன். அதற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. அப்படி தகுதியானவன் என்றால் அந்த தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் என் மூத்தோர்,ஆசிரியருடன் சேர்த்து என் நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால், அதே சமயம் என் தகுதி வாய்ந்த சில நட்புகள் அதுக்கு ஏற்ற இடத்துல இல்லாம "என்ன பண்றதுன்னே புரில மச்சி?"ன்னு புலம்பும் பொழுது என்னோட கையறு நிலையை வருந்துகிறேன். அவர்கள் அவர்களுக்கு உரிய நிலையை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் 10 வருடங்கழித்து நான் எந்த நிலையில் இருப்பேன் எனத் தெரியாது. மறதி என்ற உலக வியாதி இந்த தேதியை (29/07/2023) ஞாபகம் வைத்து இருக்க விடுமா என்று தெரியாது. இதே போல் நண்பர்களை அழைத்து பேசும் வாய்ப்பு இருக்குமா தெரியாது. ஆனால், நட்பும் என் நட்பின் நினைவலைகளும் என் மனதில் இருக்கும் என்றே தோன்றுகிறது. அத்துடன், இந்த தேதியும் மறக்காமல் இருக்க வைக்க, இங்கே பதிவாக இட்டுவிட்டேன்... இனி அடிக்கடி படிக்கும்போது மறக்காதல்லவா? இன்னும் பத்து வருடத்திற்கு பிறகும் ஞாபகம் இருக்குமல்லவா? :-)

Img source: http://3.bp.blogspot.com/-AvoXjhJtWMY/Tl2kfixZGuI/AAAAAAAAACo/7mfp_ddaGEM/s320/friendship_quotes1.jpg

8 comments:

  1. உங்கள் நட்பு பலப் பல பத்து வருடங்களை இனிமையாகக் கடக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள் :-)

    amas32

    ReplyDelete
  2. அருமை சக்திவேல்

    ReplyDelete
  3. Excellent narration. Feel jealous. :-)

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்.. அப்படி ஒன்னும் சிறப்பா எழுதலையே... நன்றி :-)

      Delete
  4. super sakthi.. add me in your call list sakthi.. :))))))))

    ReplyDelete